திருவையாறு - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

370

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்

அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்

குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே

பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா வமுதேயென் ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.1

371

தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந்

தீர்த்தா புராணனே யென்றேன் நானே
மூவா மதிசூடி யென்றேன் நானே

முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே
ஏவார் சிலையானே யென்றேன் நானே

இடும்பைக் கடல்நின்று மேற வாங்கி
ஆவாவென் றருள்புரியும் ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.2

372

அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே

அடியார்கட் காரமுதே யென்றேன் நானே
நஞ்சணி கண்டனே யென்றேன் நானே

நாவலர்கள் நான்மறையே யென்றேன் நானே
நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது

நிறையு மமுதமே யென்றேன் நானே
அஞ்சாதே ஆள்வானே ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.3

373

தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே

துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எல்லை நிறைந்தானே யென்றேன் நானே

ஏழ்நரம்பி னின்னிசையா யென்றேன் நானே
அல்லற் கடல்புக் கழுந்து வேனை

வாங்கி யருள்செய்தா யென்றேன் நானே
எல்லையாம் ஐயாறா வென்றேன் நானே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.4

374

இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே

இருசுடர் வானத்தா யென்றேன் நானே
தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே

துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே
கண்டங் கறுத்தானே யென்றேன் நானே

கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
அண்டத்துக் கப்பாலாம் ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.5

375

பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே

பசுபதி பண்டரங்கா வென்றேன் நானே
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே

கடுவிடையொன் றூர்தியா யென்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே

பார்த்தற் கருள்செய்தா யென்றேன் நானே
அற்றார்க் கருள்செய்யும் ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.6

376

விண்ணோர் தலைவனே யென்றேன் நானே

விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே

ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே

பசுபதி பால்நீற்றா யென்றேன் நானே
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.7

377

அவனென்று நானுன்னை அஞ்சா தேனை

அல்ல லறுப்பானே யென்றேன் நானே
சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்

செல்வந் தருவானே யென்றேன் நானே
பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று

பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
அவனென்றே யாதியே ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.8

378

கச்சியே கம்பனே யென்றேன் நானே

கயிலாயா காரோணா வென்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே

நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே

உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.9

379

வில்லாடி வேடனே யென்றேன் நானே

வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே
சொல்லாய சூழலா யென்றேன் நானே

சுலாவாய தொன்னெறியே யென்றேன் நானே
எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே

இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே
அல்லா வினைதீர்க்கும் ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.10

திருச்சிற்றம்பலம்