திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
196
ஒருவ ராயிரு மூவரு மாயவன்
குருவ தாய குழகன் உறைவிடம்
பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ்
கருவ தாங்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.20.1
197
வன்னி மத்தம் வளரிளந் திங்களோர்
கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.20.2
198
இல்லக் கோலமும் இந்த இளமையும்
அல்லற் கோலம் அறுத்துய வல்லிரே
ஒல்லைச் சென்றடை யுங்கடம் பூர்நகர்ச்
செல்வக் கோயில் திருக்கரக் கோயிலே.
5.20.3
199
வேறு சிந்தை யிலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத் திமையவர் தாந்தொழும்
ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.20.4
200
திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலுந்
தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.20.5
201
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்
எல்லை யான பிரானார் இருப்பிடங்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.20.6
202
தளரும் வாளர வத்தொடு தண்மதி
வளரும் பொற்சடை யாற்கிட மாவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக்
களரி யார்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.20.7
203
உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம்
பெற்றா ராய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதி லெய்த முதல்வனார்
கற்றார் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.20.8
204
வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம்
உள்ள மாய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.20.9
205
பரப்பு நீரிலங் கைக்கிறை வன்னவன்
உரத்தி னாலடுக் கல்லெடுக் கல்லுற
இரக்க மின்றி இறைவிர லாற்றலை
அரக்கி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.20.10
திருச்சிற்றம்பலம்
