திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
206
என்னி லாரும் எனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.
5.21.1
207
மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால்
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே.
5.21.2
208
கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர்
எனலும் என்மனத் தின்னம்பர் ஈசனே.
5.21.3
209
மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான்
அழைக்குந் தன்னடி யார்கள்தம் அன்பினைக்
குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மனத் தின்னம்பர் ஈசனே.
5.21.4
210
தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேரலன் பூழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே.
5.21.5
211
விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில்
அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக்
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கும் என்மனத் தின்னம்பர் ஈசனே.
5.21.6
212
சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
படைக்க ணாற்பரு கப்படு வான்நமக்
கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே.
5.21.7
213
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே.
5.21.8
214
விரியுந் தண்ணிள வேனலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவப் புருவமுந்
திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந்
தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே.
5.21.9
215
சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்
கனிய வூன்றிய காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே.
5.21.10
திருச்சிற்றம்பலம்
