திருக்கூடலையாற்றூர்

bookmark

பண் - புறநீர்மை

திருச்சிற்றம்பலம்

862

வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங்
கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகளிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

7.85.1

863

வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும்
பையர விளவல்குற் பாவையொ டும்முடனே
கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில்
ஐயனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

7.85.2

864

ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்று
வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில்
ஆர்வனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

7.85.3

865

சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனே
கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே.

7.85.4

866

வேதியர் விண்ணவரும் மண்ணவ ருந்தொழநற்
சோதிய துருவாகிச் சுரிகுழல் உமையோடுங்
கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில்
ஆதியிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

7.85.5

867

வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

7.85.6

868

மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல்
இழைநுழை துகிலல்குல் ஏந்திழை யாளோடுங்
குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில்
அழகனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

7.85.7

869

மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்
அறவனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

7.85.8

870

வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறிப்
பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்
ஆலனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

7.85.9

871

கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும்
ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால் நாவல வூரன்சொற்
பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே.

7.85.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெறிகாட்டுநாயகர், தேவியார் - புரிகுழலாளம்மை.
இது திருப்புறம்பயமென்னுந் தலத்தினின்று மெழுந்தருளித் திருக்கூடலையாற்றூருக்குச் சமீபமாகச்செல்லுகின்றவர், அந்தத் தலத்துக்குள் செல்லாமல், திருமுதுகுன்றை நோக்கிச்செல்லுங் கருத்தினராக, அந்தமார்க்கத்தில் பரமசிவம் ஒரு பிராமணராய் நிற்கக்கண்டு ஐயரே திருமுதுகுன்றுக்கு மார்க்கமெதுவென்ன, இந்தக் கூடலையாற்றூர் மார்க்கமாச் செல்லுகின்றதென்று சொல்லி வழிகாட்டிப் பின்செல்ல, சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்சென்று கூடலையாற்றூருக்குச் சமீபமாகச் சார்ந்தபோது பின்வந்த பிராமணர் மறையக்கண்டு அதிசயங்கொண்டு ஓதியபதிகம்.

திருச்சிற்றம்பலம்