திருவன்பார்த்தான்பனங்காட்டூர்

bookmark

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

872

விடையின்மேல் வருவானை

வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை

யாவர்க்கும் அறியொண்ணா
மடையில்வா ளைகள்பாயும்

வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச்

சாராதார் சார்பென்னே.

7.86.1

873

அறையும்பைங் கழலார்ப்ப

அரவாட அனலேந்திப்
பிறையுங்கங் கையுஞ்சூடிப்

பெயர்ந்தாடும் பெருமானார்
பறையுஞ்சங் கொலிஓவாப்

படிறன்றன் பனங்காட்டூர்
உறையுமெங்கள் பிரானாரை

உணராதார் உணர்வென்னே.

7.86.2

874

தண்ணார்மா மதிசூடித்

தழல்போலுந் திருமேனிக்
கெண்ணார்நாண் மலர்கொண்டங்

கிசைந்தேத்தும் அடியார்கள்
பண்ணார்பா டல்அறாத

படிறன்றன் பனங்காட்டூர்ப்
பெண்ணாணா யபிரானைப்

பேசாதார் பேச்சென்னே.

7.86.3

875

நெற்றிக்கண் ணுடையானை

நீறேறுந் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக்

கோணாதார் மனத்தானைப்
பற்றிப்பாம் பரையார்த்த

படிறன்றன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்றே றும்பிரானைப்

பேசாதார் பேச்சென்னே.

7.86.4

876

உரமென்னும் பொருளானை

உருகிலுள் ளுறைவானைச்
சிரமென்னுங் கலனானைச்

செங்கண்மால் விடையானை
வரம்முன்ன மருள்செய்வான்

வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பரமன்எங் கள்பிரானைப்

பரவாதார் பரவென்னே.

7.86.5

877

எயிலார்பொக் கம்எரித்த

எண்டோ ள்முக் கண்இறைவன்
வெயிலாய்க்காற் றெனவீசி

மின்னாய்த்தீ எனநின்றான்
மயிலார்சோ லைகள்சூழ்ந்த

வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பயில்வானுக் கடிமைக்கட்

பயிலாதார் பயில்வென்னே.

7.86.6

878

மெய்யன்வெண் பொடிபூசும்

விகிர்தன்வே தமுதல்வன்
கையில்மான் மழுவேந்திக்

காலன்கா லம்அறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த

படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை

அறியாதார் அறிவென்னே.

7.86.7

879

வஞ்சமற்ற மனத்தாரை

மறவாத பிறப்பிலியைப்
பஞ்சிச்சீ றடியாளைப்

பாகம்வைத் துகந்தானை
மஞ்சுற்ற மணிமாட

வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்தெங் கள்பிரானை

நினையாதார் நினைவென்னே.

7.86.8

880

மழையானுந் திகழ்கின்ற

மலரோனென் றிருவர்தாம்
உழையாநின் றவருள்க

உயர்வானத் துயர்வானைப்
பழையானைப் பனங்காட்டூர்

பதியாகத் திகழ்கின்ற
குழைகாதற் கடிமைக்கட்

குழையாதார் குழைவென்னே.

7.86.9

881

பாரூரும் பனங்காட்டூர்ப்

பவளத்தின் படியானைச்
சீரூருந் திருவாரூர்ச்

சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் அடித்தொண்டன்
அடியன்சொல் அடிநாய்சொல்
ஊரூரன் உரைசெய்வார்

உயர்வானத் துயர்வாரே.

7.86.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர், தேவியார் - அமிர்தவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்