திருக்கச்சூர் ஆலக்கோயில்

bookmark

பண் - கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

415

முதுவாய் ஓரி கதற முதுகாட்

டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்

மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்

கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர்

ஆலக் கோயில் அம்மானே.

7.41.1

416

கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்

கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்

கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்

ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்

ஆலக் கோயில் அம்மானே.

7.41.2

417

சாலக் கோயில் உளநின் கோயில்

அவையென் றலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்

வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்

குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்

அறங்கட் டுரைத்த அம்மானே.

7.41.3

418

விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்

மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்

கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்

பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்

ஆலக் கோயில் அம்மானே.

7.41.4

419

மேலை விதியே வினையின் பயனே

விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்

கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே

மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்

ஆலக் கோயில் அம்மானே.

7.415

420

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்

பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்

இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்

கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்

ஆலக் கோயில் அம்மானே.

7.41.6

421

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்

அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை

நினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மங்கை பங்கா

கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்

ஆலக் கோயில் அம்மானே.

7.41.7

422

ஊனைப் பெருக்கி உன்னை நினையா

தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்

கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென் னோக்கி

மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்

ஆலக் கோயில் அம்மானே.

7.41.8

423

காதல் செய்து களித்துப் பிதற்றிக்

கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க

ஐயங் கொள்வ தழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்

உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர்

ஆலக் கோயில் அம்மானே.

7.41.9

424

அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்

ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தா ரூரன்

ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்

செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்

அவரெந் தலைமேற் பயில்வாரே.

7.41.10

இந்தத் தலத்தில் பரமசிவம் அக்கிராகாரத்தில் அன்னம் பிட்சை
வாங்கி வந்தளிக்க அருந்திப் பசிதீர்ந்து துதிசெய்த பதிகம்.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தினம்விருந்திட்டநாதர், தேவியார் - கன்னியுமையம்மை.

திருச்சிற்றம்பலம்