திருக்காட்டுப்பள்ளி - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

831

மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங்
கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது
ஓட்டுப் பள்ளிவிட் டோ ட லுறாமுனங்
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.

5.84.1

832

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.

5.84.2

833

தேனை வென்றசொல் லாளொடு செல்வமும்
ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே
கான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி
ஞான நாயக னைச்சென்று நண்ணுமே.

5.84.3

834

அருத்த முமனை யாளொடு மக்களும்
பொருத்த மில்லை பொல்லாதது போக்கிடுங்
கருத்தன் கண்ணுதல் அண்ணல்காட் டுப்பள்ளித்
திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே.

5.84.4

835

சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும்
அற்ற போதணை யாரவ ரென்றென்றே
கற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப்
பெற்ற மேறும் பிரானடி சேர்மினே.

5.84.5

836

அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமுந்
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.

5.84.6

837

மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்
பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்
கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம்
ஐயன் றன்னடி யேயடைந் துய்மினே.

5.84.7

838

வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்
சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்
காலை யேதொழுங் காட்டுப்பள் ளியுறை
நீல கண்டனை நித்தல் நினைமினே.

5.84.8

839

இன்று ளார்நாளை இல்லை யெனும்பொருள்
ஒன்று மோரா துழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.

5.84.9

840

எண்ணி லாவரக் கன்மலை யேந்திட
எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்
கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை
நண்ணு வாரவர் தம்வினை நாசமே.

5.84.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆரணியசுந்தரர், தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்