திருமாற்பேறு - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
593
பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங்
கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு
திருமாற் பேறு தொழவினை தேயுமே.
5.59.1
594
ஆலத் தார்நிழ லில்லறம் நால்வர்க்குக்
கோலத் தாலுரை செய்தவன் குற்றமில்
மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு
ஏலத் தான்றொழு வார்க்கிட ரில்லையே.
5.59.2
595
துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி
அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த
மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு
பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே.
5.59.3
596
தீத வைசெய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்
போது மின்வினை யாயின போகுமே.
5.59.4
597
வார்கொள் மென்முலை மங்கையோர் பங்கினன்
வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு
வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே.
5.59.5
598
பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை
உண்டு சொல்லுவன் கேண்மின் ஒளிகிளர்
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு
கண்டு கைதொழத் தீருங் கவலையே.
5.59.6
599
மழுவ லான்றிரு நாமம் மகிழ்ந்துரைத்
தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும்
வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு
தொழவ லார்தமக் கில்லை துயரமே.
5.59.7
600
முன்ன வனுல குக்கு முழுமணிப்
பொன்ன வன்றிகழ் முத்தொடு போகமாம்
மன்ன வன்றிரு மாற்பேறு கைதொழும்
அன்ன வரெமை யாளுடை யார்களே.
5.59.8
601
வேட னாய்விச யன்னொடும் எய்துவெங்
காடு நீடுகந் தாடிய கண்ணுதல்
மாட நீடுய ருந்திரு மாற்பேறு
பாடு வார்பெறு வார்பர லோகமே.
5.59.9
602
கருத்த னாய்க்கயி லாய மலைதனைத்
தருக்கி னாலெடுத் தானைத் தகரவே
வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு
அருத்தி யாற்றொழு வார்க்கில்லை அல்லலே.
5.59.10
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
