திருமாற்பேறு - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

603

ஏது மொன்று மறிவில ராயினும்
ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப்
பேத மின்றி அவரவர் உள்ளத்தே
மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.

5.60.1

604

அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள்
நிச்ச லுந்நினை யாய்வினை போயறக்
கச்ச மாவிட முண்டகண் டாவென
வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே.

5.60.2

605

சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே.

5.60.3

606

இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்
அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினாற்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்
மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே.

5.60.4

607

சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினாற்
கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர்
மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே.

5.60.5

608

ஈட்டு மாநிதி சால இழக்கினும்
வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங்
காட்டில் மாநட மாடுவாய் காவெனில்
வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே.

5.60.6

609

ஐய னேயர னேயென் றரற்றினால்
உய்ய லாமுல கத்தவர் பேணுவர்
செய்ய பாத மிரண்டும் நினையவே
வைய மாளவும் வைப்பர்மாற் பேறரே.

5.60.7

இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

5.60.8-9


610

உந்திச் சென்று மலையை யெடுத்தவன்
சந்து தோளொடு தாளிற வூன்றினான்
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென
அந்த மில்லதோர் இன்பம் அணுகுமே.

5.60.10

திருச்சிற்றம்பலம்