திருநாகேச்சரம் - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

521

நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.

5.52.1

522

நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடுந்
தேவர் போல்திரு நாகேச் சரவரே.

5.52.2

523

ஓத மார்கட லின்விட முண்டவர்
ஆதி யார்அய னோடம ரர்க்கெலாம்
மாதோர் கூறர் மழுவல னேந்திய
நாதர் போல்திரு நாகேச் சரவரே.

5.52.3

524

சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்த லையர வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே.

5.52.4

525

பண்டோ ர் நாளிகழ் வான்பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத்
தண்ட மாவிதா தாவின் றலைகொண்ட
செண்டர் போல்திரு நாகேச் சரவரே.

5.52.5

526

வம்பு பூங்குழல் மாது மறுகவோர்
கம்ப யானை யுரித்த கரத்தினர்
செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடை
நம்பர் போல்திரு நாகேச் சரவரே.

5.52.6

527

மானை யேந்திய கையினர் மையறு
ஞானச் சோதியர் தியர் நாமந்தான்
ஆன அஞ்செழுத் தோதவந் தண்ணிக்குந்
தேனர் போல்திரு நாகேச் சரவரே.

5.52.7

528

கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்
தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி
அழகர் ஆல்நிழற் கீழற மோதிய
குழகர் போல்குளிர் நாகேச் சரவரே.

5.52.8

529

வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்
சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்
சிட்டர் போல்திரு நாகேச் சரவரே.

5.52.9

530

தூர்த்தன் றோண்முடி தாளுந் தொலையவே
சேர்த்தி னார்திருப் பாதத் தொருவிரல்
ஆர்த்து வந்துல கத்தவ ராடிடுந்
தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே.

5.52.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர்,
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்