நகர் நீங்கு படலம் - 1909
இராமன் கோலத்தைக் கண்ட சீதையின் நிலை
1909.
அழுது, தாயரோடு அருந் தவர்,
அந்தணர், அரசர்,
புழுதி ஆடிய மெய்யினர்,
புடை வந்து பொரும,
பழுது சீரையின்
உடையினன் வரும்படி பாரா,
எழுது பாவை அன்னாள்,
மனத் துணுகமொடு எழுந்தாள்.
அந்தணர்- வேதியர்; அருந்தவர் -அரிய முனிவர்; அரசர் -;
(ஆகிய அனைவரும்) அழுது -; புழுதி ஆடிய மெய்யினர்- புழுதி
படிந்த உடம்புஉடையவராய்; புடை வந்து பொரும - பக்கத்தில்வந்து
விம்மியழ; பழுது சீரையின் உடையினன் -அழகற்ற மரவுரி உடை
உடையவனாய்; வரும்படி -(இராமன்) வரும்தன்மையை; பாரா- பார்த்து;
எழுது பாவை அன்னாள் -சித்திரத்தில் எழுதப்பெற்ற பாவையை ஒத்த
சீதை; துணுக்கமொடு - மனத்தில்வெருவுதலுடனே; எழுந்தாள் -.
இதுகாறும் காணாததும் எதிர்பாராததுமான காட்சியைக் கண்டாள்
ஆதலின, சீதைக்குத்திடுக்கீடு நிகழ்ந்தது. 214
