ஆறு செல் படலம் - 2374
2374.
மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும்
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்?
கண்ணினும் மனத்தினும் , கமலத்து அண்ணல்தன்
எண்ணினும், நெடிது - அவண் எழுந்த சேனையே.
அவண் எழுந்த சேனை - அயோத்தியில் (அப்போது) புறப்பட்ட
சேனை; மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும் - பூமி,
ஆகாயம், திசைகள் ஆகியவற்றையெல்லாம் ஒருசேர; உண்ணிய நிமிர்
கடல் - உண்ணுதற்கு எழுந்த யுகாந்த காலக் கடலை; ஒக்கும் என்பது
என் - ஒத்திருக்கும் என்று சொல்வது நிரம்பாதாகும்; கமலத்து அண்ணல்
தன் - (படைப்புக் கடவுளாகிய) பிரமதேவனது; கண்ணினும், மனத்தினும்,
எண்ணினும் நெடிது - (படைத்த பொருளைக் காணும்) கண்ணையும்,
நினைக்கும்) மனத்தையும்,(நினைக்கின்ற) நினைப்பையும் கடந்து
நீண்டதாகும்.
‘உண்ணிய’ ‘செய்யிய’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; ‘நிமிர்’
என்னும்வினைகொண்டு முடிந்தது. ‘ஏ’ காரம் ஈற்றசை. 43
