திருநன்னிலத்துப்பெருங்கோயில்

bookmark

பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

995

தண்ணியல் வெம்மையி னான்றலை

யிற்கடை தோறும்பலி
பண்ணியல் மென்மொழி யார்இடக்

கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறை யோர்முறை

யாலடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத் துப்பெருங்

கோயில் நயந்தவனே.

7.98.1

996

வலங்கிளர் மாதவஞ் செய்மலை

மங்கையோர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கைதங் கச்சடை

யொன்றிடை யேதரித்தான்
பலங்கிளர் பைம்பொழில் தண்பனி

வெண்மதி யைத்தடவ
நலங்கிளர் நன்னிலத் துப்பெருங்

கோயில் நயந்தவனே.

7.98.2

997

கச்சிய னின்கருப் பூர்விருப்

பன்கரு திக்கசிவார்
உச்சியன் பிச்சையுண் ணியுல

கங்களெல் லாமுடையான்
நொச்சியம் பச்சிலை யான்நுரை

தீர்புன லாற்றொழுவார்
நச்சிய நன்னிலத் துப்பெருங்

கோயில் நயந்தவனே.

7.98.3

998

பாடிய நான்மறை யான்படு

பல்பிணக் காடரங்கா
ஆடிய மாநடத் தானடி

போற்றியென் றன்பினராய்ச்
சூடிய செங்கையி னார்பல

தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத் துப்பெருங்

கோயில் நயந்தவனே.

7.98.4

999

பிலந்தரு வாயினொ டுபெரி

தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம் இருபிள

வாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள் கோன்நெடு

மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத் துப்பெருங்

கோயில் நயந்தவனே.

7.98.5

1000

வெண்பொடி மேனியி னான்கரு

நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடை யான்பிர

மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறை யோர்பயின்

றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத் துப்பெருங்

கோயில் நயந்தவனே.

7.98.6

1001

தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை

யன்சுடர் வெண்மழுவாட்
படைமலி கையன்மெய் யிற்பகட்

டீருரிப் போர்வையினான்
மடைமலி வண்கம லம்மலர்

மேல்மட வன்னம்மன்னி
நடைமலி நன்னிலத் துப்பெருங்

கோயில் நயந்தவனே.

7.98.7

1002

குளிர்தரு திங்கள்கங் கைகுர

வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடை மேலுடை

யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங் கைதட

மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத் துப்பெருங்

கோயில் நயந்தவனே.

7.98.8

1003

கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங்

கேழற்பின் கானவனாய்
அமர்பயில் வெய்திய ருச்சுன

னுக்கருள் செய்தபிரான்
தமர்பயில் தண்விழ வில்தகு

சைவர் தவத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத் துப்பெருங்

கோயில் நயந்தவனே.

7.98.9

1004

கருவரை போலரக் கன்கயி

லைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லாலடர்த் தின்னருள்

செய்த உமாபதிதான்
திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை

வன்றிகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத் துப்பெருங்

கோயில் நயந்தவனே.

7.98.10

1005

கோடுயர் வெங்களிற் றுத்திகழ்

கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத் துப்பெருங்

கோயில் நயந்தவனைச்
சேடியல் சிங்கிதந் தைசடை

யன்றிரு வாரூரன்
பாடிய பத்தும்வல் லார்புகு

வார்பர லோகத்துள்ளே.

7.98.11

திருச்சிற்றம்பலம்