திருச்சோற்றுத்துறை
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
954
அழல்நீர் ஒழுகி யனைய சடையும்
உழையீ ருரியும் உடையான் இடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையுஞ்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.
7.94.1
955
பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடமாம்
இண்டை கொண்டன் பிடைய றாத
தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே.
7.94.2
956
கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியுஞ்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.
7.94.3
957
பளிக்குத் தாரை பவள வெற்பிற்
குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம்
அளிக்கும் ஆத்தி அல்லான் மதுவந்
துளிக்குஞ் சோலைச் சோற்றுத் துறையே.
7.94.4
958
உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு
வதையுஞ் செய்த மைந்தன் இடமாம்
திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறுந்
துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே.
7.94.5
959
ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனலுண் டெரியைக் காலுஞ்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே.
7.94.6
960
இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்
புறங்காட் டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன
துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே.
7.94.7
961
காமன் பொடியாக் கண்ணொன் றிமைத்த
ஓமக் கடலார் உகந்த இடமாம்
தேமென் குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பார் சோற்றுத் துறையே.
7.94.8
962
இலையால் அன்பால் ஏத்து மவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையாற் றாழுந் தவத்தோர்க் கென்றுந்
தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே.
7.94.9
963
சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள்
முற்றா மதிசேர் முதல்வன் பாதத்
தற்றார் அடியார் அடிநாய் ஊரன்
சொற்றான் இவைகற் றார்துன் பிலரே.
7.94.10
திருச்சிற்றம்பலம்
