திருவாலங்காடு

bookmark

பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

530

முத்தா முத்தி தரவல்ல

முகிழ்மென் முலையா ளுமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டுஞ்

சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும்

பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாவுன்

அடியார்க் கடியேன் ஆவேனே.

7.52.1

531

பொய்யே செய்து புறம்புறமே

திரிவேன் றன்னைப் போகாமே
மெய்யே வந்திங் கெனையாண்ட

மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பையா டரவம் அரைக்கசைத்த

பரமா பழைய னூர்மேய
ஐயா ஆலங் காடாவுன்

அடியார்க் கடியேன் ஆவேனே.

7.52.2

532

தூண்டா விளக்கின் நற்சோதீ

தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரமூன்றும்

பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்

பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாவுன்

அடியார்க் கடியேன் ஆவேனே.

7.52.3

533

மறிநேர் ஒண்கண் மடநல்லார்

வலையிற் பட்டு மதிமயங்கி
அறிவே அழிந்தே னையாநான்

மையார் கண்ட முடையானே
பறியா வினைக ளவைதீர்க்கும்

பரமா பழைய னூர்மேய
அறிவே ஆலங் காடாவுன்

அடியார்க் கடியேன் ஆவேனே.

7.52.4

534

வேலங் காடு தடங்கண்ணார்

வலையுட் பட்டுன் நெறிமறந்து
மாலங் காடி மறந்தொழிந்தேன்

மணியே முத்தே மரகதமே
பாலங் காடி நெய்யாடி

படர்புன் சடையாய் பழையனூர்
ஆலங் காடா உன்னுடைய

அடியார்க் கடியேன் ஆவேனே.

7.52.5

535

எண்ணார் தங்கள் எயிலெய்த

எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகங் காக்கின்ற

கருத்தா திருத்த லாகாதாய்
பண்ணா ரிசைக ளவைகொண்டு

பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங் காடாவுன்

அடியார்க் கடியேன் ஆவேனே.

7.52.6

536

வண்டார் குழலி உமைநங்கை

பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்க ளெரிசெய்த

விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்

பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங் காடாவுன்

அடியார்க் கடியேன் ஆவேனே.

7.52.7

537

பேழ்வா யரவி னணையானும்

பெரிய மலர்மே லுறைவானுந்
தாழா துன்றன் சரண்பணியத்

தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைக ளவைதீர்க்கும்

பரமா பழையனூர் தன்னை
ஆள்வாய் ஆலங் காடாவுன்

அடியார்க் கடியேன் ஆவேனே.

7.52.8

538

எம்மான் எந்தை மூத்தப்பன்

ஏழேழ் படிகால் எமையாண்ட
பெம்மான் ஈமப் புறங்காட்டிற்

பேயோ டாடல் புரிவானே
பன்மா மலர்க ளவைகொண்டு

பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங் காடாவுன்

அடியார்க் கடியேன் ஆவேனே.

7.52.9

539

பத்தர் சித்தர் பலரேத்தும்

பரமன் பழைய னூர்மேய
அத்தன் ஆலங் காடன்றன்

அடிமைத் திறமே அன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்

சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார்

பரமன் அடியே பணிவாரே.

7.52.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்துவதாண்டவேசுவரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்