திருப்புறம்பயம்

bookmark

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

351

அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி

நின்றும்போந்துவந் தின்னம்பர்த்
தங்கினோமையும் இன்னதென்றிலர்

ஈசனாரெழு நெஞ்சமே
கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள்

ஏத்திவானவர் தாந்தொழும்
பொங்குமால்விடை யேறிசெல்வப்

புறம்பயந்தொழப் போதுமே.

7.35.1

352

பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும்

பண்டையாரலர் பெண்டிரும்
நெதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும்

நினைப்பொழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம்

மகிழும்மல்லிகை செண்பகம்
புதியபூமலர்ந் தெல்லிநாறும்

புறம்பயந்தொழப் போதுமே.

7.35.2

353

புறந்திரைந்து நரம்பெழுந்து

நரைத்துநீயுரை யாற்றளர்ந்
தறம்புரிந்து நினைப்பதாண்மை

அரிதுகாண்இஃ தறிதியேல்
திறம்பியாதெழு நெஞ்சமேசிறு

காலைநாமுறு வாணியம்
புறம்பயத்துறை பூதநாதன்

புறம்பயந்தொழப் போதுமே.

7.35.3

354

குற்றொருவரைக் கூறைகொண்டு

கொலைகள்சூழ்ந்த களவெலாஞ்
செற்றொருவரைச் செய்ததீமைகள்

இம்மையேவருந் திண்ணமே
மற்றொருவரைப் பற்றிலேன்மற

வாதெழுமட நெஞ்சமே
புற்றரவுடைப் பெற்றமேறி

புறம்பயந்தொழப் போதுமே.

7.35.4

355

கள்ளிநீசெய்த தீமையுள்ளன

பாவமும்பறை யும்படி
தெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண்

சேவுடைச்சிவ லோகனூர்
துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல்

தோன்றுதாமரைப் பூக்கள்மேல்
புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும்

புறம்பயந்தொழப் போதுமே.

7.35.5

356

படையெலாம்பக டாரஆளிலும்

பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங்
கடையெலாம்பிணைத் தேரைவால்கவ

லாதெழுமட நெஞ்சமே
மடையெலாங்கழு நீர்மலர்ந்து

மருங்கெலாங்கரும் பாடத்தேன்
புடையெலாம்மணம் நாறுசோலைப்

புறம்பயந்தொழப் போதுமே.

7.35.6

357

முன்னைச்செய்வினை இம்மையில்வந்து

மூடுமாதலின் முன்னமே
என்னைநீதியக் காதெழுமட

நெஞ்சமேயெந்தை தந்தையூர்
அன்னச்சேவலோ டூடிப்பேடைகள்

கூடிச்சேரு மணிபொழிற்
புன்னைக்கன்னி கழிக்கணாறும்

புறம்பயந்தொழப் போதுமே.

7.35.7

358

மலமெலாமறும் இம்மையேமறு

மைக்கும்வல்வினை சார்கிலா
சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள்

சங்கரன்வந்து தங்குமூர்
கலமெலாங்கடல் மண்டுகாவிரி

நங்கையாடிய கங்கைநீர்
புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும்

புறம்பயந்தொழப் போதுமே.

7.35.8

359

பண்டரியன செய்ததீமையும்

பாவமும்பறை யும்படி
கண்டரியன கேட்டியேற்கவ

லாதெழுமட நெஞ்சமே
தொண்டரியன பாடித்துள்ளிநின்

றாடிவானவர்தாந் தொழும்
புண்டரீக மலரும்பொய்கை

புறம்பயந்தொழப் போதுமே.

7.35.9

360

துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந்

துயக்கறாத மயக்கிவை
அஞ்சிஊரன் திருப்புறம்பயத்

தப்பனைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயந்தொழு

துய்துமென்று நினைத்தன
வஞ்சியாதுரை செய்யவல்லவர்

வல்லவானுல காள்வரே.

7.35.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதேசுவரர்,
தேவியார் - கரும்படுசொல்லம்மை.

திருச்சிற்றம்பலம்