திருக்கற்குடி

bookmark

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

269

விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.

7.27.1

270

மறையோர் வானவருந் தொழுதேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான் எனக்கின்னமு தாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே.

7.27.2

271

சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே.

7.27.3

272

செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனே
கையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.

7.27.4

273

சந்தார் வெண்குழையாய் சரிகோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே.

7.27.5

274

அரையார் கீளொடுகோ வணமும் அரைக்கசைத்து
விரையார் கொன்றையுடன் விளங்கும்பிறை மேலுடையாய்
கரையா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.

7.27.6

275

பாரார் விண்ணவரும் பரவிப்பணிந் தேத்தநின்ற
சீரார் மேனியனே திகழ்நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சலென்னே.

7.27.7

276

நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யுங்
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.

7.27.8

277

வருங்கா லன்னுயிரை மடியத்திரு மெல்விரலாற்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே.

7.27.9

278

அலையார் தண்புனல்சூழ்ந் தழகாகி விழவமருங்
கலையார் மாதவர்சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள் நல்லசிங்கடி யப்பன்உரை
விலையார் மாலைவல்லார் வியன்மூவுல காள்பவரே.

7.27.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உச்சிவரதநாயகர், தேவியார் - அஞ்சனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்