திருமுதுகுன்றம்

bookmark

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

249

பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடியே*னிட் டளங்கெடவே.

*இட்டளம் து துன்பம்.

7.25.1

250

உம்பரும் வானவரும் உடனேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மானருளீர் அடியேனிட் டளங்கெடவே.

7.25.2

251

பத்தா பத்தர்களுக் கருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண் பரவையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.

7.25.3

252

மங்கையோர் கூறமர்ந்தீர் மறைநான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர் திகழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை குணங்கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே.

7.25.4

253

மையா ரும்மிடற்றாய் மருவார்புரம் மூன்றெரித்த
செய்யார் மேனியனே திகழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே ரல்குலாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.

7.25.5

254

நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச முதுகுன்ற மமர்ந்தவனே
படியா ரும்மியலாள் பரவையிவள் தன்முகப்பே
அடிகேள் தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.

7.25.6

255

கொந்தண வும்பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர் சடைமாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள் பரவையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே.

7.25.7

256

பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.

7.25.8

257

ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே.

7.25.9

258

பிறையா ருஞ்சடையெம் பெருமான் அருளாயென்று
முறையால் வந்தமரர் வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில் வயல்நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க் கெளிதாஞ்சிவ லோகமதே.

திருமுதுகுன்றமென்னும் விருத்தாசலத்தில் பரமசிவம்
அருளிச்செய்த பொன்னை மணிமுத்தா நதியில்
விட்டுப்போய்த் திருவாரூர்க்கமலாலயமென்னுந்
திருக்குளத்திலிறங்கிக் கையால்தடவும்போதோதிய
பதிகம். அவ்வாறு தடவும்போது, "எத்தாதிருந்தறியே
னென்னுந்" தேவாரமோதுகையில் பொருளகப்பட்டது.

7.25.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழமலைநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்