திருக்கழிப்பாலை

bookmark

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

229

செடியேன் தீவினையிற் றடுமாறக் கண்டாலும்
அடியான் ஆவவெனா தொழிதல் தகவாமே
முடிமேல் மாமதியும் அரவும் உடன்றுயிலும்
வடிவே தாமுடையார் மகிழுங்கழிப் பாலையதே.

7.23.1

230

எங்கே னும்மிருந்துன் அடியே னுனைநினைந்தால்
அங்கே வந்தென்னோடும் உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட் டெனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.

7.23.2

231

ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிட மறியாமல் உண்டுகண்டங்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.

7.23.3

232

சுரும்பார் விண்டமலர் அவைதூவித் தூங்குகண்ணீர்
அரும்பா நிற்குமனத் தடியாரொடும் அன்புசெய்வன்
விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தாற்
கரும்பா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.

7.23.4

233

ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்தருளித்
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலையா வணமுடையாய்
கழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகிற்
கழிப்பா லைமருவுங் கனலேந்து கையானே.

7.23.5

234

ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலியதள்மேற்
போர்த்தாய் ஆனையின்றோல் உரிவை புலால்நாறக்
காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப்
பார்த்தா னுக்கிடமாம் பழியில்கழிப் பாலையதே.

7.23.6

235

பருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றியதள்
உரித்தாய் ஆனையின்றோல் உலகந்தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர்கடியுங்
கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே.

7.23.7

236

படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா
உடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய்
அடர்த்தாய் வல்லரக்கன் றலைபத்தொடு தோள்நெரியக்
கடற்சா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.

7.23.8

237

பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான்
செய்யா னுங்கரிய நிறத்தானுந் தெரிவரியான்
மையார் கண்ணியொடு மகிழ்வான்கழிப் பாலையதே.

7.23.9

238

பழிசே ரில்புகழான் பரமன் பரமேட்டி
கழியார் செல்வமல்குங் கழிப்பாலை மேயானைத்
தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
வழுவா மாலைவல்லார் வானோருல காள்பவரே.

7.23.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்,
தேவியார் - பொற்பதவேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்