திருப்பழமண்ணிப்படிக்கரை

bookmark

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

219

முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி டற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே.

7.22.1

220

அண்ட கபாலஞ்சென்னி அடிமேலல ரிட்டுநல்ல
தொண்டங் கடிபரவித் தொழுதேத்திநின் றாடுமிடம்
வெண்டிங்கள் வெண்மழுவன் விரையார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம் பழமண்ணிப் படிக்கரையே.

7.22.2

221

ஆடுமின் அன்புடையீர் அடிக்காட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர் உமரோடெமர் சூழவந்து
வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே.

7.22.3

222

அடுதலை யேபுரிந்தான் அவைஅந்தர மூவெயிலுங்
கெடுதலை யேபுரிந்தான் கிளருஞ்சிலை நாணியிற்கோல்
நடுதலை யேபுரிந்தான் நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப்
படுதலை யேபுரிந்தான் பழமண்ணிப் படிக்கரையே.

7.22.4

223

உங்கைக ளாற்கூப்பி உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர்
மங்கையோர் கூறுடையான் வானோர்முத லாயபிரான்
அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய
பங்கய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே.

7.22.5

224

செடிபடத் தீவிளைத்தான் சிலையார்மதில் செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை எருதேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன்றன்னைக் கறுத்தான்கழற் செம்பவளப்
படியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே.

7.22.6

225

கடுத்தவன் தேர்கொண்டோ டிக் கயிலாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால் வேதகீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீணற்றன் பழமண்ணிப் படிக்கரையே.

7.22.7

226

திரிவன மும்மதிலும் எரித்தான்இமை யோர்பெருமான்
அரியவன் *அட்டபுட்பம் அவைகொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும் அடியும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக் கரையே.

*அட்டபுட்பமாவன து புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம்,
நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை
என்னுமிவற்றின் புட்பங்களாம். இவை புலரி முதலிய
காலங்களிற் சாத்தும் அட்டபுட்பம். மற்றுமுள்ளவைகளைப்
புட்பவிதியிற் காண்க.

7.22.8

227

வெற்றரைக் கற்றமணும் விரையாதுவிண் டாலமுண்ணுந்
துற்றரைத் துற்றறுப்பான் றுன்னஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று கருதேன்மின் படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று பழிபாவங்கள் தீர்மின்களே.

7.22.9

228

பல்லுயிர் வாழுந்தெண்ணீணர்ப் பழமண்ணிப் படிக்கரையை
அல்லியந் தாமரைத்தார் ஆரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும்
எல்லியும் நன்பகலும் இடர்கூருதல் இல்லையன்றே.

7.22.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்,
தேவியார் - வடிக்கண்ணமுதகரநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்