திருக்கோளிலி

bookmark

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

199

நீள நினைந்தடி யேனுமை

நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள்

வாடி வருந்தாமே
கோளிலி எம்பெரு மான்குண்டை

யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவை

அட்டித் தரப்பணியே.

7.20.1

200

வண்டம ருங்குழ லாளுமை

நங்கையோர் பங்குடையாய்
விண்டவர் தம்புர மூன்றெரி

செய்தவெம் வேதியனே
தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்

கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவ னேயவை

அட்டித் தரப்பணியே.

7.20.1

201

பாதியோர் பெண்ணைவைத் தாய்பட

ருஞ்சடைக் கங்கைவைத்தாய்
மாதர்நல் லார்வருத் தம்மது

நீயும் அறிதியன்றே
கோதில் பொழில்புடை சூழ்குண்டை

யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புத னேயவை

அட்டித் தரப்பணியே.

7.20.3

202

சொல்லுவ தென்னுனை நான்தொண்டை

வாயுமை நங்கையைநீ
புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு

பூசல்செய் தாருளரோ
கொல்லை வளம்புற விற்குண்டை

யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
அல்லல் களைந்தடி யேற்கவை

அட்டித் தரப்பணியே.

7.20.4

203

முல்லை முறுவல் உமையொரு

பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலை யிற்பலி

கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புற விற்றிருக்

கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடி யேற்கவை

அட்டித் தரப்பணியே.

7.20.5

204

குரவம ருங்குழ லாளுமை

நங்கையோர் பங்குடையாய்
பரவை பசிவருத் தம்மது

நீயும் அறிதியன்றே
குரவம ரும்பொழில் சூழ்குண்டை

யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
அரவ மசைத்தவ னேயவை

அட்டித் தரப்பணியே.

7.20.6

205

எம்பெரு மானுனை யேநினைந்

தேத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழ லாளொரு

பாகம மர்ந்தவனே
செம்பொனின் மாளிகை சூழ்திருக்

கோளிலி எம்பெருமான்
அன்பது வாயடி யேற்கவை

அட்டித் தரப்பணியே.

7.20.7

206

அரக்கன் முடிகரங் கள்அடர்த்

திட்டவெம் மாதிபிரான்
பரக்கும் அரவல்கு லாள்பர

வையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதி கொள்குண்டை

யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
இரக்கம தாயடி யேற்கவை

அட்டித் தரப்பணியே.

7.20.8

207

பண்டைய மால்பிர மன்பறந்

தும்மிடந் தும்மயர்ந்துங்
கண்டில ராயவர் கள்கழல்

காண்பரி தாயபிரான்
தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்

கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவ னேயவை

அட்டித் தரப்பணியே.

7.20.9

208

கொல்லை வளம்புற விற்றிருக்

கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பர வுந்திரு

நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந்

தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துல கின்அண்டர்

வானுல காள்பவரே.

7.20.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலிநாதர்,
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்