திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

64

செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ்

சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலுந்

தென்னானைக் காவுஞ் சிராப்பள்ளியும்
நல்லூருந் தேவன் குடிமருகலும்

நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங்
கல்லலகு நெடும்புருவக் கபாலமேந்திக்

கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே.

6.7.1

65

தீர்த்தப் புனற்கெடில வீரட்டமுந்

திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீர் அண்ணாமலை

அறையணி நல்லூரும் அரநெறியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்றஈசன்

இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமுங்

கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே.

6.7.2

66

சிறையார் புனற்கெடில வீரட்டமுந்

திருப்பா திரிப்புலியூர் திருவாமாத்தூர்
துறையார் வனமுனிக ளேத்தநின்ற

சோற்றுத் துறைதுருத்தி நெய்த்தானமும்
அறையார் புனலொழுகு காவிரிசூழ்

ஐயாற் றமுதன் பழனம்நல்ல
கறையார் பொழில்புடைசூழ் கானப்பேருங்

கழுக்குன்றுந் தம்முடைய காப்புக்களே.

6.7.3

67

திரையார் புனற்கெடில வீரட்டமுந்

திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றியூரும்

ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
வரையா ரருவிசூழ் மாநதியும்

மாகாளங் கேதாரம் மாமேருவுங்
கரையார் புனலொழுகு காவிரிசூழ்

கடம்பந் துறையுறைவார் காப்புக்களே.

6.7.4

68

செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்

திரிபுராந் தகந்தென்னார் தேவீச்சரங்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங்

குடமூக்குங் கோகரணங் கோலக்காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட்டூரும்

பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங்
கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங்

கணபதீச் சரத்தார்தங் காப்புக்களே.

6.7.5

69

தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ்

செழுந்தண் பிடவூருஞ் சென்றுநின்று
பவ்வந் திரியும் பருப்பதமும்

பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வந் திரையும் மணிமுத்தமும்

மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங்
கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங்

கழிப்பாலை தம்முடைய காப்புக்களே.

6.7.6

70

தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்

சிக்காலி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர்
உறையூர் நறையூர் அரணநல்லூர்
விண்ணார் விடையான் விளமர்வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலைமிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங்
காபாலி யாரவர்தங் காப்புக்களே.

6.7.7

71

தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந்

திண்டீச் சரமுந் திருப்புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும்

ஏயீச் சரமுநல் லேமங்கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங்

குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங்
கள்ளருந்தத் தெள்ளியா ருள்கியேத்துங்

காரோணந் தம்முடைய காப்புக்களே.

6.7.8

72

சீரார் புனற்கெடில வீரட்டமுந்
திருக்காட்டுப் பள்ளி திருவெண்காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்
பந்தணை நல்லூரும் பாசூர்நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றியூரும்

நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலுங்
காரார் கமழ்கொன்றைத் தாரார்க்கென்றுங்

கடவூரில் வீரட்டங் காப்புக்களே.

6.7.9

73

சிந்தும் புனற்கெடில வீரட்டமுந்

திருவாஞ் சியமுந் திருநள்ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்

ஆக்கூரு மாவூரு மான்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவது

இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங்
கந்தங் கமழுங் கரவீரமுங்

கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே.

6.7.10

74

தேனார் புனற்கெடில வீரட்டமுந்

திருச்செம்பொன் பள்ளிதிருப் பூவணமும்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்

மதிலுஞ்சை மாகாளம் வாரணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்

இலங்கார் பருப்பதத்தோ டேணார்சோலைக்
கானார் மயிலார் கருமாரியுங்

கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.

6.7.11

75

திருநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்

திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மானிருபமும்

மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற

பிரமபுரஞ் சுழியல் பெண்ணாகடங்
கருநீல வண்டரற்றுங் காளத்தியுங்

கயிலாயந் தம்முடைய காப்புக்களே.

6.7.12

திருச்சிற்றம்பலம்