திருவாரூர் - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

62

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே.

5.7.1

63

எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே.

5.7.2

64

வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக்
கிண்டை மாலை புனைந்தும் இராப்பகல்
தொண்ட ராகித் தொடர்ந்து விடாதவர்க்
கண்டம் ஆளவும் வைப்பர்ஆ ரூரரே.

5.7.3

65

துன்பெ லாமற நீங்கிச் சுபத்தராய்
என்பெ லாம்நெக்கி ராப்பக லேத்திநின்
றின்ப ராய்நினைந் தென்றும் இடையறா
அன்ப ராமவர்க் கன்பர்ஆ ரூரரே.

5.7.4

66

முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம்
அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர்
முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியை
அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே.

5.7.5

67

எம்மை யாரிலை யானுமு ளேனலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்
கம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே.

5.7.6

68

தண்ட ஆளியைத் தக்கன்றன் வேள்வியைச்
செண்ட தாடிய தேவர கண்டனைக்
கண்டு கண்டிவள் காதலித் தன்பதாய்க்
கொண்டி யாயின வாறென்றன் கோதையே.

5.7.7

69

இவண மைப்பல பேசத் தொடங்கினாள்
அவண மன்றெனில் ஆரூர் அரனெனும்
பவணி வீதி விடங்கனைக் கண்டிவள்
தவணி யாயின வாறென்றன் தையலே.

5.7.8

70

நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்
காரொத் தமிடற் றர்கனல் வாயரா
ஆரத் தர்உறை யும்மணி ஆரூரைத்
தூரத் தேதொழு வார்வினை தூளியே.

5.7.9

71

உள்ள மேயொன் றுறுதி யுரைப்பன்நான்
வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன்
அள்ளல் நீர்வயல் ஆரூர் அமர்ந்தவெம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே.

5.7.10

72

விண்ட மாமலர் மேலுறை வானொடுங்
கொண்டல் வண்ணனுங் கூடி அறிகிலா
அண்ட வாணன்றன் ஆரூர் அடிதொழப்
பண்டை வல்வினை நில்லா பறையுமே.

5.7.11

73

மையு லாவிய கண்டத்தன் அண்டத்தன்
கையு லாவிய சூலத்தன் கண்ணுதல்
ஐயன் ஆரூர் அடிதொழு வார்க்கெலாம்
உய்ய லாமல்லல் ஒன்றிலை காண்மினே.

5.7.12

திருச்சிற்றம்பலம்