திருநள்ளாறு - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

681

உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை
நள்ளா றாவென நம்வினை நாசமே.

5.68.1

682

ஆர ணப்பொரு ளாமரு ளாளனார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
நார ணன்நண்ணி யேத்துநள் ளாறனார்
கார ணக்கலை ஞானக் கடவுளே.

5.68.2

683

மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில்
சோகம் பூண்டழல் சோரத்தொட் டானவன்
பாகம் பூண்டமால் பங்கயத் தானொடு
நாகம் பூண்டுகூத் தாடுநள் ளாறனே.

5.68.3

684

மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்
நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம்
வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே.

5.68.4

685

உறவ னாய்நிறைந் துள்ளங் குளிர்ப்பவன்
இறைவ னாகிநின் றெண்ணிறைந் தானவன்
நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன்
மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே.

5.68.5

686

செக்க ரங்கழி செஞ்சுடர்ச் சோதியார்
நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார்
வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச்
சக்க ரமருள் செய்த சதுரரே.

5.68.6

687

வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்
நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே.

5.68.7

688

அல்ல னென்று மலர்க்கரு ளாயின
சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான்
வல்ல னென்றும்வல் லார்வள மிக்கவர்
நல்ல னென்றுநல் லார்க்குநள் ளாறனே.

5.68.8

689

பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும்
பூம்ப ணைப்பொலி கின்ற புராணனுந்
தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல்
நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே.

5.68.9

690

இலங்கை மன்னன் இருபது தோளிற
மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர்
நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும்
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.

5.68.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருநள்ளாற்றீசர், தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.

திருச்சிற்றம்பலம்