திருவலஞ்சுழி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
664
ஓத மார்கட லின்விட முண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.
5.66.1
665
கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன்
மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனைப்
பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே.
5.66.2
666
இளைய காலமெம் மானை யடைகிலாத்
துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல்
வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக்
களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே.
5.66.3
667
நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க்
குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவ னையினி என்றுகொல் காண்பதே.
5.66.4
668
விண்ட வர்புர மூன்று மெரிகொளத்
திண்டி றற்சிலை யாலெரி செய்தவன்
வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி
அண்ட னுக்கடி மைத்திறத் தாவனே.
5.66.5
669
படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை
அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான்
மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி
அடைந்த வர்க்கடி மைத்திறத் தாவனே.
5.66.6
670
நாக்கொண் டுபர வும்மடி யார்வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன்
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே.
5.66.7
671
தேடு வார்பிர மன்திரு மாலவர்
ஆடு பாத மவரும் அறிகிலார்
மாட வீதி வலஞ்சுழி யீசனைத்
தேடு வானுறு கின்றதென் சிந்தையே.
5.66.8
672
கண்ப னிக்குங் கைகூப்புங் கண்மூன்றுடை
நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும்
வண்பொ னித்தென் வலஞ்சுழி மேவிய
பண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே.
5.66.9
673
இலங்கை வேந்தன் இருபது தோளிற
நலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் வாரடி யென்றலை மேலவே.
5.66.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலஞ்சுழிநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
