திருக்கோளிலி - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

563

மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.

5.56.1

564

முத்தி னைமுத லாகிய மூர்த்தியை
வித்தி னைவிளை வாய விகிர்தனைக்
கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி
அத்த னைத்தொழ நீங்கும்நம் மல்லலே.

5.56.2

565

வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர்
கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக்
கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய
அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.

5.56.3

566

பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவுங் கங்கையுந் திங்களும் ஒண்சடை
குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
நிலவி னான்றனை நித்தல் நினைமினே.

5.56.4

567

அல்ல லாயின தீரும் அழகிய
முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே
கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச்
செல்வன் சேவடி சென்று தொழுமினே.

5.56.5

568

ஆவின் பால்கண் டளவில் அருந்தவப்
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல்
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
மேவி னானைத் தொழவினை வீடுமே.

5.56.6

569

சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலாற்
கூத்த னாருறை யுந்திருக் கோளிலி
ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே.

5.56.7

570

மால தாகி மயங்கு மனிதர்காள்
காலம் வந்து கடைமுடி யாமுனங்
கோல வார்பொழிற் கோளிலி மேவிய
நீல கண்டனை நின்று நினைமினே.

5.56.8

571

கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது
தேடி நீர்திரி யாதே சிவகதி
கூட லாந்திருக் கோளிலி ஈசனைப்
பாடு மின்னிர வோடு பகலுமே.

5.56.8

572

மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை
அடர்த்துப் பின்னும் இரங்கி யவற்கருள்
கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே.

5.56.9

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலிநாதர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்