திருவேகம்பம் - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

468

பண்டு செய்த பழவினை யின்பயன்
கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே
வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன்
தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே.

5.47.1

469

நச்சி நாளும் நயந்தடி யார்தொழ
இச்சை யாலுமை நங்கை வழிபடக்
கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழிற்
கச்சி யேகம்ப மேகை தொழுமினே.

5.47.2

470

ஊனி லாவி இயங்கி உலகெலாம்
தானு லாவிய தன்மைய ராகிலும்
வானு லாவிய பாணி பிறங்கவெங்
கானி லாடுவர் கச்சியே கம்பரே.

5.47.3

471

இமையா முக்கணர் என்னெஞ்சத் துள்ளவர்
தமையா ரும்மறி வொண்ணாத் தகைமையர்
இமையோ ரேத்த இருந்தவன் ஏகம்பன்
நமையா ளும்மவ னைத்தொழு மின்களே.

5.47.4

472

மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக் காயவெம் புண்ணியன்
கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ
இருந்த வன்கச்சி ஏகம்பத் தெந்தையே.

5.47.5

473

பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க்
கருளும் நன்மைதந் தாய அரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேகம்பம்
இருள்கெடச் சென்று கைதொழு தேத்துமே.

5.47.6

474

மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந்
தாக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சி யேகம்பனே.

5.47.7

475

பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
வண்ண மில்லி வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி கச்சி யேகம்பனே.

5.47.8

476

திருவின் நாயகன் செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான்
ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர்
கருவுள் நாயகன் கச்சி யேகம்பனே.

5.47.9

477

இடுகு நுண்ணிடை ஏந்திள மென்முலை
வடிவின் மாதர் திறம்மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள்
அடிகள் எம்மை அருந்துயர் தீர்ப்பரே.

5.47.10

478

இலங்கை வேந்தன் இராவணன் சென்றுதன்
விலங்க லையெடுக் கவ்விர லூன்றலுங்
கலங்கிக் கச்சியே கம்பவோ வென்றலும்
நலங்கொள் செலவளித் தானெங்கள் நாதனே.

5.47.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர், தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்