திருவாமாத்தூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
437
மாமாத் தாகிய மாலயன் மால்கொடு
தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி
ஆமாத் தூரர னேஅரு ளாயென்றென்
றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே.
5.44.1
438
சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமத்தூர் அழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே.
5.44.2
439
காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான்
போமாத் தையறி யாது புலம்புவேன்
ஆமாத் தூரர னேயென் றழைத்தலுந்
தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே.
5.44.3
440
பஞ்ச பூத வலையிற் படுவதற்
கஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே.
5.44.4
441
குராம னுங்குழ லாளொரு கூறனார்
அராம னுஞ்சடை யான்றிரு வாமாத்தூர்
இராம னும்வழி பாடுசெய் ஈசனை
நிராம யன்றனை நாளும் நினைமினே.
5.44.5
442
பித்த னைப்பெருந் தேவர் தொழப்படும்
அத்த னையணி யாமாத்தூர் மேவிய
முத்தி னையடி யேனுள் முயறலும்
பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே.
5.44.6
443
நீற்றி னார்திரு மேனியன் நேரிழை
கூற்றி னான்குழல் கோலச் சடையிலோர்
ஆற்றி னான்அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றி னான்எமை யாளுடை ஈசனே.
5.44.7
444
பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்
கண்ணித் தாகும் அமுதினை ஆமாத்தூர்
சண்ணிப் பானைத் தமர்க்கணித் தாயதோர்
கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே.
5.44.8
445
குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா
மிண்ட ரோடெனை வேறு படுத்துயக்
கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்டத்
தண்ட னாரிடம் ஆமாத்தூர் காண்மினே.
5.44.9
446
வானஞ் சாடு மதியர வத்தொடு
தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே.
5.44.10
447
விடலை யாய்விலங் கல்லெடுத் தான்முடி
அடர வோர்விரல் ஊன்றிய ஆமாத்தூர்
இடம தாக்கொண்ட ஈசனுக் கென்னுளம்
இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே.
5.44.11
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதர், தேவியார் - அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
