திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
379
குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செயும் பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே.
5.38.1
380
உன்னி வானவர் ஓதிய சிந்தையிற்
கன்னல் தேன்கட வூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை என்னார் பெருமா னடிகளே.
5.38.2
381
சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே.
5.38.3
382
இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல்
மறவ னார்கட வூரின் மயானத்தார்
அறவ னாரடி யாரடி யார்தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே.
5.38.4
383
கத்து காளி கதந்தணி வித்தவர்
மத்தர் தாங்கட வூரின் மயானத்தார்
ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு
பித்தர் காணும் பெருமா னடிகளே.
5.38.5
384
எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர்
கரியர் தாங்கட வூரின் மயானத்தார்
அரியர் அண்டத்து ளோரயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமா னடிகளே.
5.38.6
385
அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்
வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணங்கொள் காடர் பெருமா னடிகளே.
5.38.7
386
அரவு கையினர் ஆதி புராணனார்
மரவு சேர்கட வூரின் மயானத்தார்
பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வார்
பிரமன் மாற்கும் பெருமா னடிகளே.
5.38.8
இப்பதிகத்தில் 9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
5.38.9-10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழன்மின்னம்மை.
திருச்சிற்றம்பலம்
