திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
338
கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.
5.34.1
339
இரவ னையிடு வெண்டலை யேந்தியைப்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே.
5.34.2
340
ஆனி டையைந்தும் ஆடுவ ராரிருள்
கானி டைநடம் ஆடுவர் காண்மினோ
தேனி டைமலர் பாயுநெய்த் தானனை
வானி டைத்தொழு வார்வலி வாணரே.
5.34.3
341
விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக்
கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத்
தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே.
5.34.4
342
முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான்
நங்கை யோடு நவின்றநெய்த் தானனைத்
தங்கை யாற்றொழு வார்தலை வாணரே.
5.34.5
343
சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிருட் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே.
5.34.6
344
கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ
தெள்ளித் தேறித் தெளிந்துநெய்த் தானனை
உள்ளத் தாற்றொழு வாரும்பர் வாணரே.
5.34.7
345
உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை
பற்றி யாடர வோடுஞ்ச டைப்பெய்தான்
நெற்றி யாரழல் கண்டநெய்த் தானனைச்
சுற்றி மெய்தொழு வார்சுடர் வாணரே.
5.34.8
346
மாலொ டும்மறை யோதிய நான்முகன்
காலொ டும்முடி காண்பரி தாயினான்
சேலொ டுஞ்செருச் செய்யும்நெய்த் தானனை
மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே.
5.34.9
347
வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே.
5.34.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
