திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
327
கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்
தில்லைச் சிற்றம் பலத்துறைச் செல்வனார்
தொல்லை யூழியர் சோற்றுத் துறையர்க்கே
வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.
5.33.1
328
முத்தி யாக வொருதவஞ் செய்திலை
அத்தி யாலடி யார்க்கொன் றளித்திலை
தொத்து நின்றலர் சோற்றுத் துறையர்க்கே
பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.
5.33.2
329
ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்தவை போயறத்
தொட்டு நின்றுமச் சோற்றுத் துறையர்க்கே
பட்டி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.
5.333
330
ஆதி யானண்ட வாணர்க் கருள்நல்கு
நீதி யானென்றும் நின்மல னேயென்றுஞ்
சோதி யானென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
வாதி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.
5.33.4
331
ஆட்டி னாயடி யேன்வினை யாயின
ஓட்டி னாயொரு காதில் இலங்குவெண்
தோட்டி னாயென்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே.
5.33.5
332
பொங்கி நின்றெழுந் தகடல் நஞ்சினைப்
பங்கி யுண்டதோர் தெய்வமுண் டோ சொலாய்
தொங்கி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்குத்
தங்கி நீபணி செய்மட நெஞ்சமே.
5.33.6
333
ஆணி போலநீ ஆற்ற வலியைகாண்
ஏணி போலிழிந் தேறியும் ஏங்கியுந்
தோணி யாகிய சோற்றுத் துறையர்க்கே
பூணி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.
5.33.7
334
பெற்றம் ஏறிலென் பேய்படை யாகிலென்
புற்றி லாடர வேயது பூணிலென்
சுற்றி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
பற்றி நீபணி செய்மட நெஞ்சமே.
5.33.8
335
அல்லி யானர வைந்தலை நாகணைப்
பள்ளி யானறி யாத பரிசெலாஞ்
சொல்லி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
புல்லி நீபணி செய்மட நெஞ்சமே.
5.33.9
336
மிண்ட ரோடு விரவியும் வீறிலாக்
குண்டர் தம்மைக் கழிந்துய்யப் போந்துநீ
தொண்டு செய்தென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
உண்டு நீபணி செய்மட நெஞ்சமே.
5.33.10
337
வாழ்ந்த வன்வலி வாளரக் கன்றனை
ஆழ்ந்து போயல றவ்விர லூன்றினான்
சூழ்ந்த பாரிடஞ் சோற்றுத் துறையர்க்குத்
தாழ்ந்து நீபணி செய்மட நெஞ்சமே.
5.33.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர்,
தேவியார் - ஒப்பிலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
