திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
286
நிறைக்க வாலியள் அல்லளிந் நேரிழை
மறைக்க வாலியள் அல்லளிம் மாதராள்
பிறைக்க வாலிப் பெரும்புனல் ஆவடு
துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே.
5.29.1
287
தவள மாமதிச் சாயலோர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்மிறை
அளவு கண்டிலள் ஆவடு தண்டுறைக்
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே.
5.29.2
288
பாதி பெண்ணொரு பாகத்தன் பன்மறை
ஓதி யென்னுளங் கொண்டவன் ஒண்பொருள்
ஆதி ஆவடு தண்டுறை மேவிய
சோதி யேசுட ரேயென்று சொல்லுமே.
5.29.3
289
கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்
வார்க்கொள் மென்முலை சேர்ந்திறு மாந்திவள்
ஆர்க்கொள் கொன்றையன் ஆவடு தண்டுறைத்
தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே.
5.29.4
290
கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன்
பருகு பாலமு தேயென்னும் பண்பினன்
அருகு சென்றிலள் ஆவடு தண்டுறை
ஒருவன் என்னை யுடையகோ வென்னுமே.
5.29.5
291
குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமுந்
தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடு தண்டுறை யாவெனக்
கழலுங் கைவளை காரிகை யாளுக்கே.
5.29.6
292
பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்
தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும்
அஞ்சு வாளல்லள் ஆவடு தண்டுறை
மஞ்ச னோடிவள் ஆடிய மையலே.
5.29.7
293
பிறையுஞ் சூடிநற் பெண்ணொடா ணாகிய
நிறையு நெஞ்சமும் நீர்மையுங் கொண்டவன்
அறையும் பூம்பொழில் ஆவடு தண்டுறை
இறைவன் என்னை யுடையவன் என்னுமே.
5.29.8
294
வையந் தானளந் தானும் அயனுமாய்
மெய்யைக் காணலுற் றார்க்கழ லாயினான்
ஐயன் ஆவடு தண்டுறை யாவெனக்
கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே.
5.29.9
295
பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்
மிக்க வாளரக் கன்வலி வீட்டினான்
அக்க ணிந்தவன் ஆவடு தண்டுறை
நக்கன் என்னுமிந் நாணிலி காண்மினே.
5.29.10
திருச்சிற்றம்பலம்
