திருப்பாசூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
246
முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
சிந்திப் பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
அந்திக் கோன்றனக் கேயருள் செய்தவர்
பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே.
5.25.1
247
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார்
கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே.
5.25.2
248
நாறு கொன்றையும் நாகமுந் திங்களும்
ஆறுஞ் செஞ்சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்
பாறி னோட்டினர் பாசூ ரடிகளே.
5.25.3
249
வெற்றி யூருறை வேதிய ராவர்நல்
ஒற்றி யேறுகந் தேறு மொருவனார்
நெற்றிக் கண்ணினர் நீளர வந்தனைப்
பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே.
5.25.4
250
மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால்
இட்ட வேட்கைய ராகி யிருப்பவர்
துட்ட ரேலறி யேனிவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே.
5.25.5
251
பல்லில் ஓடுகை யேந்திப் பகலெலாம்
எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர்
சொல்லிப் போய்ப்புகும் ஊரறி யேன்சொலீர்
பல்கு நீற்றினர் பாசூ ரடிகளே.
5.25.6
252
கட்டி விட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கிவந் தில்புகுந் தவ்வவர்
இட்ட மாவறி யேனிவர் செய்வன
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே.
5.25.7
253
வேத மோதிவந் தில்புகுந் தாரவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி யொன்றறி யார்நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப் பாசூ ரடிகளே.
5.25.8
254
சாம்பற் பூசுவர் தாழ்சடை கட்டுவர்
ஓம்பல் மூதெரு தேறு மொருவனார்
தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர்
பாம்பு மாட்டுவர் பாசூ ரடிகளே.
5.25.9
255
மாலி னோடு மறையவன் றானுமாய்
மேலுங் கீழும் அளப்பரி தாயவர்
ஆலின் நீழல் அறம்பகர்ந் தார்மிகப்
பால்வெண் ணீற்றினர் பாசூ ரடிகளே.
5.25.10
256
திரியு மூவெயில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன ரேனும் இலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்விர லொன்றினாற்
பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே.
5.25.11
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசூர்நாதர்,
தேவியார் - பசுபதிநாயகி.
திருச்சிற்றம்பலம்
