திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
185
தளருங் கோளர வத்தொடு தண்மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடங்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.19.1
186
வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமுஞ்
சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும்
அலவ லான்மனை யார்ந்தமென் றோளியைக்
கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.19.2
187
பொய்தொ ழாது புலியுரி யோன்பணி
செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா
வைதெ ழாதெழு வாரவர் எள்கநீர்
கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே.
5.19.3
188
துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே
பண்ணி னான்முனம் பாடல துசெய்தே
எண்ணி லாரெயில் மூன்றும் எரித்தமுக்
கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.19.4
189
சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை
நினையும் உள்ளத் தவர்வினை நீங்குமே.
5.19.5
190
குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலுங்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.
5.19.6
191
பண்ணி னார்மறை பல்பல பூசனை
மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்
விண்ணி னார்கள் வியக்கப் படுவன
கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே.
5.19.7
192
அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்
கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத்
தங்கை யாற்றொழு வார்வினை சாயுமே.
5.19.8
193
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.
5.19.9
194
பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும்
மணங்க மழ்மலர்த் தாமரை யானவன்
பிணங்கும் பேரழல் எம்பெரு மாற்கிடங்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.
5.19.10
195
வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலை
அரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார்
திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை
உரைக்கும் உள்ளத் தவர்வினை ஓயுமே.
5.19.11
திருச்சிற்றம்பலம்
