திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

175

முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்
அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங்
கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்
பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே.

5.18.1

176

தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும்
முனகு தீரத் தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே.

5.18.2

177

ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.

5.18.3

178

பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மல ரான்பல தேவருங்
கண்ண னும்மறி யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை யாயின நாசமே.

5.18.4

179

மறைகொண் டமனத் தானை மனத்துளே
நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை தீரத் தொழுமினே.

5.18.5

180

நங்கை பாகம்வைத் தநறுஞ் சோதியைப்
பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ
கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை
அங்க மோதி அரனுறை கின்றதே.

5.18.6

181

அரிய நான்மறை ஆறங்க மாயைந்து
புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
உரிய வாறு நினைமட நெஞ்சமே.

5.18.7

182

பூமென் கோதை உமையொரு பாகனை
ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற்
காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாம மேத்தநந் தீவினை நாசமே.

5.18.8

183

பார ணங்கி வணங்கிப் பணிசெய
நார ணன்பிர மன்னறி யாததோர்
கார ணன்கடம் பந்துறை மேவிய
ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே.

5.18.9

184

நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே.

5.18.10

திருச்சிற்றம்பலம்