அறிவின்மை
இன்பவியல்
[அதாவது முன் கூறிய பகுத்தறிவில்லாமை.]
251. நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ,
கண்ணவாத் தக்க கலம்.
(இ-ள்.) நுண் உணர்வு இன்மை - நுட்பமான அறிவில்லாமையானது, வறுமை - தரித்திரமாம்; அஃது உடைமை - அப்படிப்பட்ட அறிவை யுடையவனாதல், பண்ணப் பணைத்த - மிகவும் வளர்ந்த, பெரு செல்வம் - பெரிய சம்பத்து ஆம்; எண்ணுங்கால் - யோசித்தால், பெண் அவாய் - பெண் தன்மையை விரும்பி, ஆண் இழந்த - ஆண் தன்மை இழந்த, பேடி - அலியானவள், கண் அவா தக்க - கண்கள் - விரும்பும்படியான, கலம் - ஆபரணங்களை, அணியாளோ - தரிக்க மாட்டாளோ [தரிப்பாள்], எ-று.
மனிதருக்குச் செல்வமென்பதும் தரித்திரமென்பதும் அறிவும் அறிவில்லாமையுமே யன்றிப் பொருளும் பொருளின் மையு மன்று. பேடியும் நல்ல அணிகளை அணிவாளே, அதனால் வரும் சிறப்பு சிறப்பன்று என்பது கருத்து.
விசேஷமாய் ஆபரணங்களைத் தரித்தல் பெண்களுக்கே யியல்பாதலால் ஆணிலக்கணங் குறைந்து பெண்ணிலக்கண மிகுந்த பேடி என்றார். பண்ணப்பணைத்த என்பது கன்னங் கறுத்த சின்னஞ்சிறுத்த பன்னப்பருத்த என்பவை போல் மிகுதிப் பொருள் பற்றி வந்த பணை என்பதின் அடுக்கெனக் கொள்க. ஐ அகரமானது விகாரம், பண்ண - செய்ய, (பணைக்கும்படி செய்ய) பணைத்த எனப்பொருள் கூறின் சிறப்பில்லையாம். வடமொழிகள் இங்ஙனம் அடுக்கி விகாரப்பட்டு வருவன பலவுள் இதனை "க்ரியா ஸம்ஹிகாரம்" என்பர் அவாவுதற்குத் தக்க என்பது அவாத்தக்க என்றாயிற்று.
252. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்லல் உழப்பது அறிதிரேல் - தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி உறைதலால் சேரானே
பூவின் கிழத்தி புலந்து.
(இ-ள்.) பல் - அநேகமான, ஆன்ற - நிறைந்த, கேள்வி - கேள்விகளின், பயன் உணர்வார் - பிரயோசனத்தை அறிந்தவர்கள், பாடு அழிந்து - பெருமைகெட்டு, அல்லல் உழப்பது - துன்பங்களால் வருந்துவதை, அறிதிரேல் - அறிய விரும்புவீர்களே யானால், (சொல்லுகிறேன்), தொல் சிறப்பின் - பழமையான சிறப்பையுடைய, நாவின் கிழத்தி - சரசுவதிதேவி, உறைதலால் - வாசஞ்செய்வதனால், பூவின் கிழத்தி - திருமகள், புலந்து - பிணங்கி, சேராளே - (அவரிடம்) சேரமாட்டாளே, எ-று.
அறிவைப் பெருமைப்படுத்துகிறீரே கற்றறிந்த புலவர் வெகு சங்கடப்படுவதேன் என்று ஒருவர் வினாவினதாகப் பாவித்து, பெண்களியல்பு தெரியாதா ஒருத்தி சேர்ந்தவிடத்து மற்றொருத்தி சேர்வதில்லையே. ஆதலின் சரசுவதி சேர்ந்த விடத்தில் இலக்குமி சேர்வதில்லையெனச் சாதுரியமா வுத்தரஞ் சொல்லினார். உண்மையோ கல்விச்சுவை தோய்ந்தவர்க்குச் செல்வத்தில் மிகுந்த விருப்பஞ் செல்லாமையே காரணமென்க. கிழமை - உரிமை, அதனை யுடையாள் கிழத்தி. அறிவுடைமையிற் குற்றங் கூறுதல் தவறு என்றபடி.
253. கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.
(இ-ள்.) தந்தை - பிதா, கல் என்று கழற - கல்வியைக் கற்றுக் கொள் என்று சொல்ல, அதனை ஓர் சொல் என்று கொள்ளாது - அதை ஒரு சொல்லாக ஏற்றுக் கொள்ளாமல், இகழ்ந்தவன் - தள்ளிவிட்டவன், மெல்ல - மெதுவாக, எழுத்து ஓலை - எழுத்தைக் கொண்டிருக்கிற ஓலையை, பல்லார்முன் - பலருக்கு எதிரில், நீட்ட - (படி என்று) கொடுக்க, விளியா - செத்தாற் போலாகி, வழுக்கு ஓலை - அங்கிருந்து தப்பிப் போய்விடும்படியான தொனியை, கொண்டுவிடும் - கொண்டு விடுவான், எ-று.
விளியா - கோபித்து, வழு - (அடித்தலாகிய) தப்பிதத்தைச் செய்யத்தக்க, கோலை - தடிக்கொம்பை, கொண்டுவிடும், எனவும் உரைப்பர்.
254. கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.
(இ-ள்.) கல்லாது நீண்ட ஒருவன் - கல்வி கற்காமல் வளர்ந்த ஒருவன், உலகத்து -, நல் அறிவாளரிடை - நல்ல விவேகமுள்ளவர் நடுவில், புக்கு - பிரவேசித்து, மெல்ல இருப்பினும் - சும்மா இருந்தாலும், நாய் இருந்தது அற்றே - நாய் இருந்தாற் போலாம்; இராது உரைப்பினும் - சும்மாயிராமற் போனாலும், நாய் -, குரைத்தது அற்று - குரைத்தாற் போலும், எ-று.
புக்கு - புகு என்பதில் ககரம் இரட்டிக் காலங்காட்டி உகரவிகுதி பெற்றது.
255. புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
கல்லாத சொல்லும் கடையெல்லாம் - கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து.
(இ-ள்.) புல்லா - (கோட்டி இலக்கணம்) சேராத, புல் கோட்டி - அற்பக்கூட்டத்தையுடைய, புலவரிடை - (புன்) புலவர் நடுவில், புக்கு - பிரவேசித்து, கடை எல்லாம் - அற்பரெல்லாம், கல்லாத - தாம் கல்லாத விஷயங்களையும், சொல்லும் - சொல்வார்கள்; சான்றவர் - பெரியோர், கற்ற - (தாம்) கற்ற விஷயங்களை, (வினாவுவோர் புத்தி தாம் சொல்லும்) பொருளின்மேல், படா - செல்லாமல், விடுபாக்கு அறிந்து - விடுபட்டுப் போவதைத் தெரிந்து, சொல்லார் - சொல்ல மாட்டார்கள், எ-று.
அற்பர் அற்ப கோட்டியிற் சென்று தாம் கல்லாதவற்றையும் சும்மாச் சொல்வர், பெரியோர்களோ வினாவினாலும் தாம் கற்றறிந்தவைகளையும் சொல்வதில்லை, ஏனெனில் கேட்போர் புத்தி தாம் சொல்வதின் மேற் படாமற்போ மென்பதை யறிந்து என்றபடி.
கடை என்பது பொருளில் உயர்திணையானாலும் சொல்லில் பால் பகா அஃறிணையானதால் எல்லாமென்பதும் சொல்லும் என்பதும் அதனொடு பொருந்தின என அறிக. கடாயினும் என்பதில் யகரம் வந்தது போலிவழக்கு, கோயில் என்பது போல; [உயிர் புணர். 13வது] சூத்திரத்தில் நெறி என்ற மிகையினால் வந்ததெனவுங் கொள்ளலாம். விடுபாக்கு - தொழிற்பெயர், பாக்கு - விகுதி.
256. கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி.
(இ-ள்.) கற்று அறிந்த - நூல்களைப் படித்து அவற்றின் உட்பொருள் அறிந்த, நாவினார் - புலவர், தம் சோர்வு அஞ்சி - தமக்குப் பிழை நேரிடுவதற்குப் பயப்பட்டு, சொல்லார் - (விஷயங்களைக் கண்டபடி எடுத்து) சொல்லார்; மற்றையர் ஆவார் - கற்றறியா தவர்கள், பகர்வர் - (தோன்றியபடி) சொல்வர்; பனையின்மேல் - பனைமரத்தில், வற்றிய ஓலை - உலர்ந்த ஓலை, கலகலக்கும் - கலகல என்று சத்திக்கும்; எஞ்ஞான்றும் - எப்போதும், பச்சோலைக்கு - பச்சையாயிருக்கிற ஓலைக்கு, ஒலி இல்லை - ஓசை இல்லை, எ-று.
படித்தவர் சொல்வதில் பிழை நேரிடுமோ என்று பயந்து ஆலோசித்துச் சொல்வார்கள். கல்லாதாரோ வாய்க்குவந்தபடி சொல்வார்கள். இவர்களுக்கு உலர்ந்தவோலையும் பச்சையோலையும் உபமானம்.
பசுமை பச்சு என்றாயிற்று. நாவினார் - புலவர்க்குக் காரணப் பெயர்.
257. பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகும் செவிக்கு.
(இ-ள்.) நன்று அறியா மாந்தர்க்கு - நன்மை தெரிந்து கொள்ள மாட்டாத மனிதருக்கு, அறத்து ஆறு - தருமத்தின் விழியானது, உரைக்குங்கால் - சொல்லுமளவில், பன்றி கூழ் பத்தரில் - பன்றிக்குக் கூழ்வார்க்குந் தொட்டியில், தேமா - மதுரமான மாங்கனியை, வடித்தற்று - பிழிந்தாற் போலும்; குன்றின் மேல் கொட்டும் தறி போல் - மலைமேல் அடிக்கிற கட்டுத்தறி போல், தலை தகர்ந்து - (அத்தருமவழிகள்) தலை சிதறி, செவிக்கு - காதுக்கு, சென்று இசையா ஆகும் - போய்க் கேளாதவைகளாய் விடும், எ-று.
பன்றிக்குக் கூழுருசி தெரியுமல்லது தேமாவி னுருசி தெரியாது அதுபோல் கீழ் மக்களுக்குத் தருமவுபதேசம் இனியாது ஆதலின் அவ்வுபதேசம் மலைமேல் அடிக்குந்தறி உள்ளிறங்காமல் தலைபிளந்து போவதுபோல் சிதறிப் போய் காதிலேறாது; அதனால் அது வீண் என்கிறபடி.
258. பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
கோலாற் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா
நோலா உடம்பிற்கு அறிவு.
(இ-ள்.) பாலால் கழீஇ - பாலினாலே கழுவி, பலநாள் உணக்கினும் - அநேககாலம் உலர்த்தி வைத்தாலும், இருந்தைக்கு - சரிக்கு, வாலிது ஆம் பக்கம் - வெண்மையான பக்கமானது, - இருந்தன்று - இருந்ததில்லை; கோலால் கடாய் - கோல் கொண்டு அடித்து, கூறினும் - சொன்னாலும், நோலா உடம்பிற்கு - புண்ணியஞ் செய்யாத உடம்புக்கு [மனிதனுக்கு என்றபடி], அறிவு - ஞானமானது, புகல் ஒல்லா - புகமாட்டாது, எ-று.
கரியைப் பாலால் கழுவினாலும் வெண்மை யுண்டாகாதது போல் ஜன்மாந்தர புண்ணியமில்லாத மனிதனுக்கு எத்தனை சொன்னாலும் அறிவு வருவதில்லை என்பதாம்.
கடாய் - கடா - பகுதி, யகரம் - வினையெச்சவிகுதி, கூறினும் என்பது குறினும் எனக் குறுகிற்று.
259. பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், - இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.
(இ-ள்.) பொழிந்து இனிது நாறினும் - (தேனைப்) பொழிந்து இனிப்பாகப் (பரிமளம்) வீசினாலும், பூ மிசைதல் செல்லாது - பூந்தேனை உண்ணுதற்குப் போகாமல், இழிந்தவை காமுறும் - ஈனமான வஸ்துக்களை விரும்புகின்ற, ஈ போல் - ஈயைப் போலே, இழிந்தவை கலந்த நெஞ்சினார்க்கு - இழிவான விஷயங்கள் பொருந்தின மனதுள்ளவர்க்கு, தக்கார் வாய் - யோக்கியருடைய வாயிலுண்டாகிற, தேன் கலந்த - மதுரஞ் சேர்ந்த, தேற்ற சொல் - தெளிவான சொற்களுடைய, தேர்வு - உண்மை, என் ஆகும் - என்ன பயனைத் தரும், எ-று. தாம் - அசை.
இனிது - குறிப்பு முற்று, இங்கே வினைபுரியா நின்றது ஆக என்னும் வருவிக்குஞ் சொல்லுக்கு எழுவாயெனக் கொள்ளவுமாம். நாறினும் என்ற வினையின் தொடர்ச்சியால் இனிய கந்தத்தை எனச் செயப்படு பொருளாக்கினும் அமையும்.
260. கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ்சு உதைத்தலால்; - மற்றுமோர்
தன்போல் ஒருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.
(இ-ள்.) கற்றார் உரைக்கும் - கற்றவர் சொல்லுகின்ற, கசடு அறு நுண் கேள்வி - குற்றமற்ற நுட்பமான பிரசங்கத்தை, தன் நெஞ்சு - தன் மனமானது, பற்றாது - பிடியாமல், உதைத்தலால் - தள்ளிப்போடுவதினால், மற்றும் - பின்னும், தன் போல் ஒருவன் - தன்னைப் போன்ற ஒருவனுடைய, முகம் நோக்கி - முகத்தைப் பார்த்து, கீழ் - கீழ்மகன், தானும் -, ஓர் புன் கோட்டி கொள்ளும் - ஒரு அற்ப பிரசங்கத்தைச் செய்வான், எ-று. ஓர், ஆம் - அசைகள்.
கீழ்மக்கள் கற்றார்சொல்வது தன் மனதுக்குப் பிடியாத போது அதனை அலக்ஷியஞ்செய்து தான் மிகத் தெரிந்தவன் போல் மற்றொரு மூடனை நோக்கிப் பிரசங்கிப்பான் என்பது கருத்து.
இவ்வளவால் இத்தன்மையானது அறிவின்மையென அதன் சொரூப குணங்களை யறிவித்து அங்ஙனமிராது விவேகத்தோடிருக்க வேண்டு மென்றதாயிற்று. போல் - இங்கு வினைத்தொகை.
