நம்பியாண்டார் நம்பி பாசுரங்கள்

bookmark

12.1 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை (1036 - 1055)

திருச்சிற்றம்பலம்

1036    

என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.    

1

1037    

முகத்தாற் கரியன்என் றாலும் தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியன்என் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார்
அகத்தான் திகழ்திரு நாரையூர் அம்மான் பயந்தஎம்மான்
உகத்தா னவன்தன் உடலம் பிளந்த ஒருகொம்பனே.    

2

1038    

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு.    

3

1039    

பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியும்என்
றேசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட்
கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும்இந்தத்
தேசத் தவர்தொழு நாரைப் பதியுள் சிவக்களிறே.    

4

1040    

களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.    

5

1041    

மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் சுரன்மகற்கு
முகத்தது கைஅந்தக் கையது மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே.    

6

1042    

மருப்பைஒரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பைஅடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்தஎண்ணு கின்றஎறும் பன்றே அவரை
வருந்தஎண்ணு கின்ற மலம்.    

7

1043  

 மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி றேஉன்னை வாழ்த்துவனே.    

8

1044    

வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவான் அன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம்.    

9

1045  

 நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத்
தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனே
காரண னேஎம் கணபதி யேநற் கரிவதனா
ஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே.    

10

1046    

அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.    

11

1047    

கோவிற் கொடிய நமன்தமர் கூடா வகைவிடுவன்
காவிற் திகழ்தரு நாரைப் பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத் தொற்றை மருப்பின்முக்கண்
ஏவிற் புருவத் திமையவள் தான்பெற்ற யானையையே.    

12

1048    

யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானே சனார்த்தனற்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலன்ஏந்தி
எடுத்த மதமுகத்த ஏறு.    

13

1049    

ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழு நாரைப் பதியுள் விநாயகனே.    

14

1050    

கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.    

15

1051    

வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென் றுரைப்பர்இவ் வையகத்தே.  

 16

1052    

வையகத்தார் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநஞ் சிந்தைஅமர் வான்.    

17

1053    

அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதிஅமர்ந்த
குமரா குமரர்க்கு முன்னவ னேகொடித் தேர்அவுணர்
தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேஎனநின்
றமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே.    

18

1054  

 அவமதியா துள்ளமே அல்லலற நல்ல
தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்
கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன்சீர் நாம்.    

19

1055    

நாந்தன மாமனம் ஏத்துகண் டாய்என்றும் நாண்மலரால்
தாந்தன மாக இருந்தனன் நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேஐந்து செங்கைய னேநின் திரள்மருப்பை
ஏந்தின னேஎன்னை ஆண்டவ னேஎனக் கென்னையனே.    

20

திருச்சிற்றம்பலம்