ஒன்பதாந் திருமுறை ஆசிரியர்கள் வரலாறு

bookmark

திருமாளிகைத் தேவர் : சோழ மன்னர்களுக்குத் தீட்சை செய்யும் மரபில் தோன்றியவர். தவநெறி பூண்டு, திருவாவடுதுறையை அடைந்து, அரச மாற நீழலில் அரும் தவம் செய்து சிவயோகியான போகனாதரிடம் ஞானோபதேசம் பெற்று சித்தராகவும் சிறந்தஞானியாகவும் விளங்கினார். ஒருமுறை சிவபூஜைக்காகத் திருமஞ்சனம் எடுத்து வருகையில் எதிரில் பிணம் சுமந்து வருவதைக் கண்டு, திருமஞ்சனக் குடத்தை அந்தரத்தே நிற்கச்செய்து, பிணத்தைச் சுடுகாட்டை அடையச் செய்தார். திருவீழிமிழலையில் தேரினைத் தானே ஓடச் செய்தார். திருவாவடுதுறைக் கோயிலின் மதிலில் இருந்த நந்திகளை அனுப்பி நரசிங்கன் என்ற அரசனது படையை வென்றார். திருவாவடுதுறை மடத்தில் இவருக்குத் தனிச் சன்னதி அமைந்துள்ளது.

சேந்தனார்  திருவெண்காட்டுக்கருகிலுள்ள நாங்கூரில் வாழ்ந்தவர். தில்லைப் பெருமானுக்கு பிட்டமுது படைத்தவர். தேரினைத் திருப்பல்லாண்டு பாடி ஓடச் செய்தவர்.   

கருவூர்த் தேவர்: கருவூரில் பிறந்தவர். ராஜ ராஜ சோழன் காலத்தவர். திருநெல்வேலியில் நெல்லையப்பரின் அருள் பெற்றவர் . தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கின்போது அஷ்டபந்தன மருந்து பெருமானை நிலைபெறச் செய்ய முடியாததால் கருவூரார் பெருமான் அருளால் நிலை பெறச் செய்தார். 

பூந்துருத்தி நம்பி காட நம்பி: திருப்பூந்துருத்தியில் அந்தணர் மரபில் தோன்றியவர்.  சிவப்பதிகள் பலவற்றையும் தரிசித்துப் பெருமான் மீது பாடல்கள் பாடியவர்.

கண்டராதித்தர் : பராந்தக சோழரின் புதல்வர். செம்பியன் மாதேவியாரின் கணவர். சிவபக்தியில் சிறந்தவர். தில்லைப் பெருமானிடம் பேரன்பு பூண்டவர். 

திருவாலி அமுதனார்  பிறந்த ஊர் மயிலாடுதுறை என்பர். திருவாளியைச் சேர்ந்த வைணவர் என்றும் பின்னர் சிவபெருமானிடம் ஆட்பட்டவர் என்றும் கூறுவார். தில்லைக் கூத்தனிடம் அளவற்ற அன்பு பூண்டவர்.

புருடோத்தம நம்பி: இவரது பெயர் மூலம் வைணவ குலத்தைச் சார்ந்தவர் என்று அறியப்படுகிறது. அம்பலவாணரிடம் இவருக்கு அளவுகடந்த அன்பு இருந்ததை அவரது பாடல்கள் மூலம் அறிகிறோம். 

சேதிராயர்: திருக்கோவலூருக்கருகிலுள்ள சேதிநாட்டுச் சிற்றரசர்.