முதற் காண்டம்

bookmark

சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

1. திருமலைச் சருக்கம்

1 பாயிரம்

திருச்சிற்றம்பலம்

001    

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.    

1.0.1

002    

ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியைச் சாருமால்
தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள்
மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ.    

1.0.2

003    

எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம்.    

1.0.3

004    

மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே.    

1.0.4

005    

அளவிலாத பெருமையராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
அளவிலாசை துரைப்ப அறைகுவேன்.    

1.0.5

006    

தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்
பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப்
பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்.    

1.0.6

007  

 செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
அப் பொருட்கு உரை யாவரும் கொள்வரால்
இப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்.    

1.0.7

008    

மேய இவ் உரை கொண்டு விரும்புமாம்
சேயவன் திருப் பேரம்பலம் செய்ய
தூய பொன்னணி சோழன் நீடூழிபார்
ஆய சீர் அநபாயன் அரசவை.    

1.0.8

009    

அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்
தெருளில் நீரிது செப்புதற்காம் எனின்
வெருளில் மெய்ம்மொழி வான் நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே.    

1.0.9

010    

இங்கிதன் நாமம் கூறின் இவ்வுலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டின் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.    

1.0.10