திருநாகேச்சரம்

bookmark

பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

1006

பிறையணி வாணு தலாள்உமை

யாளவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங் கநீல

மால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லைமுல் லைஅளைந்

துகுளிர் மாதவிமேற்
சிறையணி வண்டுகள் சேர்திரு

நாகேச் சரத்தானே.

7.99.1

1007

அருந்தவ மாமுனி வர்க்கரு

ளாகியோர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரி தற்கியல்

பாகிய தென்னைகொலாங்
குருந்தய லேகுர வம்மர

வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மல ருந்திரு

நாகேச் சரத்தானே.

7.99.2

1008

பாலன தாருயிர் மேற்பரி

யாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித் துக்கருத்

தாக்கிய தென்னைகொலாங்
கோல மலர்க்குவ ளைக்கழு

நீர்வயல் சூழ்கிடங்கிற்
சேலொடு வாளைகள் பாய்திரு

நாகேச் சரத்தானே.

7.99.3

1009

குன்ற மலைக்கும ரிகொடி

யேரிடை யாள்வெருவ
வென்றி மதகரி யின்னுரி

போர்த்தது மென்னைகொலாம்
முன்றில் இளங்கமு கின்முது

பாளை மதுவளைந்து
தென்றல் புகுந்துல வுந்திரு

நாகேச் சரத்தானே.

7.99.4

1010

அரைவிரி கோவணத் தோடர

வார்த்தொரு நான்மறைநூல்
உரைபெரு கவ்வுரைத் தன்று

உகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணி யும்வரைச்

சந்தகி லோடுமுந்தித்
திரைபொரு தண்பழ னத்திரு

நாகேச் சரத்தானே.

7.99.5

1011

தங்கிய மாதவத் தின்றழல்

வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலி யுஞ்செழு

மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந் துபிளந்

தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழ னித்திரு

நாகேச் சரத்தானே.

7.99.6

1012

நின்றவிம் மாதவத் தையொழிப்

பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணை வேள்பொடி

யாக விழித்தலென்னே
பங்கய மாமலர் மேன்மது

வுண்டுவண் தேன்முரலச்
செங்கயல் பாய்வயல் சூழ்திரு

நாகேச் சரத்தானே.

7.99.7

1013

வரியர நாண தாகமா

மேரு வில்லதாக
அரியன முப்புரங் கள்ளவை

யாரழ லூட்டலென்னே
விரிதரு மல்லிகை யும்மலர்ச்

சண்பக மும்மளைந்து
திரிதரு வண்டுபண் செய்திரு

நாகேச் சரத்தானே.

7.99.8

1014

அங்கியல் யோகுதன் னையழிப்

பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணை வேள்பொடி

யாக விழித்தலென்னே
பங்கய மாமலர் மேல்மது

வுண்டுபண் வண்டறையச்
செங்கயல் நின்றுக ளுந்திரு

நாகேச் சரத்தானே.

7.99.9

1015

குண்டரைக் கூறையின் றித்திரி

யுஞ்சமண் சாக்கியப்பேய்
மிண்டரைக் கண்டதன் மைவிர

வாகிய தென்னைகொலோ
தொண்டிரைத் துவணங் கித்தொழில்

பூண்டடி யார்பரவுந்
தெண்டிரைத் தண்வயல் சூழ்திரு

நாகேச் சரத்தானே.

7.99.10

1016

கொங்கணை வண்டரற் றக்குயி

லும்மயி லும்பயிலுந்
தெங்கணை பூம்பொழில் சூழ்திரு

நாகேச் சரத்தானை
வங்கம் மலிகடல் சூழ்வயல்

நாவலா ரூரன்சொன்ன
பங்கமில் பாடல்வல் லாரவர்

தம்வினை பற்றறுமே.

7.99.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர்,
தேவியார் - குன்றமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்