திருப்புக்கொளியூர் அவிநாசி
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
933
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற்
புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.
7.92.1
934
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணியெ னைக்கிறி செய்ததே.
7.92.2
935
எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்காற்
கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலை
பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே
எங்கோ னேயுனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.
7.92.3
936
உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
7.92.4
937
அரங்காவ தெல்லா மாயிடு காடது வன்றியுஞ்
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே.
7.92.5
938
நாத்தா னும்உனைப் பாடலன் றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே.
7.92.6
939
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறஞ்
சந்திகள் தோறுஞ் சலபுட்பம் இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.
7.92.7
940
பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியே
காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே.
7.92.8
941
நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.
7.92.9
942
நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே.
7.92.10
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அவிநாசியப்பர், தேவியார் - பெருங்கருணைநாயகி.
இது முதலையுண்டபிள்ளையை அழைப்பித்தபதிகம்.
திருச்சிற்றம்பலம்
