திருவெண்பாக்கம்

bookmark

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

902

பிழையுளன பொறுத்திடுவர்

என்றடியேன் பிழைத்தக்காற்
பழியதனைப் பாராதே

படலமென்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா

கோயிலுளா யேயென்ன
உழையுடையான் உள்ளிருந்து

உளோம்போகீர் என்றானே.

7.89.1

903

இடையறியேன் தலையறியேன்

எம்பெருமான் சரணமென்பேன்
அடையுடையன் நம்மடியான்

என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன்

வெண்ணீற்றன் புலியின்றோல்
உடையுடையான் எனையுடையான்

உளோம்போகீர் என்றானே.

7.89.2

904

செய்வினையொன் றறியாதேன்

திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும்

பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தா

யோவென்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான்

உளோம்போகீர் என்றானே.

7.89.3

905

கம்பமருங் கரியுரியன்

கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன்

சேயிழையோ டுடனாகி
நம்பியிங்கே இருந்தீரே

என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணையெனக்கு

உளோம்போகீர் என்றானே.

7.89.4

906

பொன்னிலங்கு நறுங்கொன்றை

புரிசடைமேற் பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள்

பாகமா எருதேறித்
துன்னியிரு பால்அடியார்

தொழுதேத்த அடியேனும்
உன்னதமாய்க் கேட்டலுமே

உளோம்போகீர் என்றானே.

7.89.5

907

கண்ணுதலாற் காமனையுங்

காய்ந்ததிறற் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல்

தீமலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய்

இங்கிருந்தா யோவென்ன
ஒண்ணுதலி பெருமானார்

உளோம்போகீர் என்றானே.

7.89.6

908

பார்நிலவு மறையோரும்

பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச்

சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர்

இங்கிருந்தீ ரேயென்ன
ஊரரவம் அரைக்கசைத்தான்

உளோம்போகீர் என்றானே.

7.89.7

909

வாரிடங்கொள் வனமுலையாள்

தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப்

பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன்

கருதுமிடந் திருஒற்றி
யூரிடங்கொண் டிருந்தபிரான்

உளோம்போகீர் என்றானே.

7.89.8

910

பொன்னவிலுங் கொன்றையினாய்

போய்மகிழ்க்கீ ழிருவென்று
சொன்னஎனைக் காணாமே

சூளறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே

இங்கிருந்தா யோவென்ன
ஒன்னலரைக் கண்டாற்போல்

உளோம்போகீர் என்றானே.

7.89.9

911

மான்றிகழுஞ் சங்கிலியைத்

தந்துவரு பயன்களெல்லாந்
தோன்றஅருள் செய்தளித்தாய்

என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்

இங்கிருந்தா யோவென்ன
ஊன்றுவதோர் கோலருளி

உளோம்போகீர் என்றானே.

7.89.10

912

ஏராரும் பொழில்நிலவு

வெண்பாக்கம் இடங்கொண்ட
காராறும் மிடாற்றானைக்

காதலித்திட் டன்பினொடுஞ்
சீராருந் திருவாரூர்ச்

சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லார்க்

கடையாவல் வினைதானே.

7.89.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் - வெண்பாக்கத்தீசுவரர், தேவியார் - கனிவாய்மொழியம்மை.

இது திருவொற்றியூரில் சங்கிலிநாச்சியாருக்குக் கூறிய சபதத்தை மறந்து திருவாரூருக்குச் செல்லுங்கருத்தினால், திருவொற்றியூரெல்லையைக்
கடந்த அளவில் பார்வைமறைய அவ்வண்ணமேயெழுந்தருளி வெண்பாக்கத்திற்சென்று ஆலயத்துக்குளடைந்து தரிசித்துக் கோயிலிலிருக்கின்றீரோவென்ன, பரமசிவம் ஊன்றுகோலொன்றருளிச்செய்து நாம் கோயிலுலிருக்கிறோம் நீர் போமென்று அருளிச்செய்தபோது ஓதிய பதிகம்.

திருச்சிற்றம்பலம்