திருவாரூர்

bookmark

பண் - புறநீர்மை

திருச்சிற்றம்பலம்

842

அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை யென்றுகொல் எய்துவதே.

7.83.1

843

நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதுந்
துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து
தென்றல் மணங்கமழுந் தென்றிரு வாரூர்புக்
கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே.

7.83.2

844

முன்னை முதற்பிறவி மூதறி யாமையினாற்
பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச்
செந்நெல் வயற்கழனித் தென்றிரு வாரூர்புக்
கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொல் எய்துவதே.

7.83.3

845

நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக்
கொல்ல நினைப்பனவுங் குற்றமும் அற்றொழியச்
செல்வ வயற்கழனித் தென்றிரு வாரூர்புக்
கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே.

7.83.4

846

கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன்
சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய்
அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக்
கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே.

7.83.5

847

சூழொளி நீர்நிலந்தீத் தாழ்வளி ஆகாசம்
வானுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள்
ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக்
கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே.

7.83.6

848

கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த
வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமராச்
செம்பொனை நன்மணியைத் தென்றிரு வாரூர்புக்
கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே.

7.83.7

849

ஆறணி நீண்முடிமேல் ஆடர வஞ்சூடிப்
பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன்
சேறணி தண்கழனித் தென்றிரு வாரூர்புக்
கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே.

7.83.8

850

மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடுந்
திண்ணிய மாமதில்சூழ் தென்றிரு வாரூர்புக்
கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே.

7.83.9

851

மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை
நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன்
பன்னெடுஞ் சொல்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார்
பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே.

7.83.10

திருச்சிற்றம்பலம்