திருச்சுழியல்

bookmark

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

832

ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும்
வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின்
தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல்
நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.

7.82.1

833

தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றானவன் உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே.

7.82.2

834

கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாரடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர் அலராள்பிரி யாளே.

7.82.3

835

மலையான்மகள் மடமாதிட மாகத்தவள் மற்றுக்
கொலையானையின் உரிபோர்த்தவெம் பெருமான்றிருச் சுழியல்
அலையார்சடை யுடையானடி தொழுவார்பழு துள்ளம்
நிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே.

7.82.4

836

உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்துஞ்
செற்றார்திரு மேனிப்பெரு மானூர்திருச் சுழியல்
பெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமங்
கற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே.

7.82.5

837

மலந்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச்
சலந்தாங்கிய முடியான்அமர்ந் திடமாந்திருச் சுழியல்
நிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்நினைந் தேத்துந்
தலந்தாங்கிய புகழாம்மிகு தவமாஞ்சது ராமே.

7.82.6

838

சைவத்தசெவ் வுருவன்றிரு நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண் மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்றிருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை தீர்தல்லெளி தன்றே.

7.82.7

839

பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியுங்
கோவேந்திய வினையத்தொடு குறுகப்புகல் அறியார்
சேவேந்திய கொடியானவன் உறையுந்திருச் சுழியல்
மாவேந்திய கரத்தான்எம சிரத்தான்றன தடியே.

7.82.8

840

கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்விச்
செண்டாடுதல் புரிந்தான்திருச் சுழியற்பெரு மானைக்
குண்டாடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா
மிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே.

7.82.9

841

நீரூர்தரு நிமிலன்றிரு மலையார்க்கயல் அருகே
தேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான்றிருச் சுழியல்
பேரூரென உரைவானடி பெயர்நாவலர் கோமான்
ஆரூரன தமிழ்மாலைபத் தறிவார்துயர் இலரே.

7.82.10

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இணைத்திருமேனிநாதர், தேவியார் - துணைமாலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்