திருக்கேதீச்சரம்

bookmark

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

812

நத்தார்புடை ஞானம்பசு ஏறிந்நனை கவிழ்வாய்
மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற்
செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே.

7.80.1

813

சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளுங்
கடமார்களி யானைஉரி அணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்
திடமாஉறை கின்றான்றிருக் கேதீச்சரத் தானே.

7.80.2

814

அங்கம்மொழி அன்னாரவர் அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேற்
செங்கண்ணர வசைத்தான்றிருக் கேதீச்சரத் தானே.

7.80.3

815

கரியகறைக் கண்டனல்ல கண்மேலொரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருட்
பரியதிரை எறியாவரு பாலாவியின் கரைமேற்
றெரியும்மறை வல்லான்றிருக் கேதீச்சரத் தானே.

7.80.4

816

அங்கத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேற்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே.

7.80.5

817

வெய்யவினை யாயஅடி யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்
பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்
செய்யசடை முடியான்றிருக் கேதீச்சரத் தானே.

7.80.6

818

ஊனத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரிற்
பானத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்றிருக் கேதீச்சரத் தானே.

7.80.7

819

அட்டன்னழ காகவரை தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரிற்
பட்டவரி நுதலாளொடு பாலாவியின் கரைமேற்
சிட்டன்நமை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.

7.80.8

820

மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரிற்
பாவம்வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல்
தேவன்னெனை ஆள்வான்றிருக் கேதீச்சரத் தானே.

7.80.9

821

கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித் தொண்டனுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே.

7.80.10

இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கேதீசுவரர், தேவியார் - கௌரியம்மை.

திருச்சிற்றம்பலம்