திருவதிகைத்திருவீரட்டானம்

bookmark

பண் - கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

383

தம்மானை அறியாத சாதியார் உளரே

சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல்

உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்

ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.

7.38.1

384

முன்னேயெம் பெருமானை மறந்தென்கொல் மறவா

தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்
பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக்

குன்றமே ஈச஦னென் றுன்னையே புகழ்வேன்
அன்னேயென் அத்தாவென் றமரரால் அமரப்

படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னேயென் எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.

7.38.2

385

விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே

விண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின் றேத்துங்
கரும்பேயென் கட்டியென் றுள்ளத்தால் உள்கிக்

காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும்

வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை
இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.

7.38.3

386

நாற்றானத் தொருவனை நானாய பரனை

நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக்
காற்றானைத் தீயானைக் கடலானை மலையின்

றலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள
ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான்

தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண்
ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.

7.38.4

387

சேந்தாய மலைமங்கை திருநிறமும் பரிவும்

உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக்
கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள்

சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி
வாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கி

மறிகடலை இடங்கொள்வான் மலையாரம் வாரி
ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.

7.38.5

388

மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்

வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்பும்

தடுமாறுஞ் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற
வெம்மான மதகரியின் உரியானை வேத

விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.

7.38.6

389

வெய்தாய வினைக்கடலிற் றடுமாறும் உயிர்க்கு

மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம்
பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத்

தெண்டோ ளெம் பெருமானைப் பெண்பாகம் ஒருபாற்
செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத் தீவாய்

அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ
எய்தானை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.

7.38.7

390

பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை

பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்

சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி
அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமானின்

உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னானை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.

7.38.8

391

திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச்

சிலைவளைவித் தொருகணையாற் றொழில்பூண்ட சிவனைக்
கருந்தாள மதகளிற்றின் உரியானைப் பெரிய

கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்
பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்

உடையானைப் பேயுருவ மூன்றுமுற மலைமேல்
இருந்தானை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.

7.38.9

392

என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்

எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்

வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கும் அறிவரிய அத்தர்

பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

7.38.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி.

திருச்சிற்றம்பலம்