திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
438
மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழுலகு மாயி னானே
இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.1
439
தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
நிலையவனாய் நின்னொப்பா ரில்லா தானே
நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த
கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட
கூற்றுவனே கொடிமதில்கள் மூன்று மெய்த
சிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.2
440
முற்றாத பான்மதியஞ் சூடி னானே
முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானே
உற்றாரென் றொருவரையு மில்லா தானே
உலகோம்பும் ஒண்சுடரே யோதும் வேதங்
கற்றானே யெல்லாக் கலைஞா னமுங்
கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்
செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.3
441
கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே
காலங்க ளூழிகண் டிருக்கின் றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய் வானே
வேதனாய் வேதம் விரித்திட் டானே
எண்ணவனா யெண்ணார் புரங்கள் மூன்றும்
இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.4
442
நம்பனே நான்மறைக ளாயி னானே
நடமாட வல்லானே ஞானக் கூத்தா
கம்பனே கச்சிமா நகரு ளானே
கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே அளவிலாப் பெருமை யானே
அடியார்கட் காரமுதே ஆனே றேறுஞ்
செம்பொனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.5
443
ஆர்ந்தவனே யுலகெலாம் நீயே யாகி
யமைந்தவனே யளவிலாப் பெருமை யானே
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா
கொடுமூ விலையதோர் சூல மேந்திப்
பேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய
பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற்
சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.6
444
வானவனாய் வண்மை மனத்தி னானே
மாமணிசேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே
கடிய அரணங்கள் மூன்றட் டானே
தானவனாய்த் தண்கயிலை மேவி னானே
தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந்
தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.7
445
தன்னவனாய் உலகெல்லாந் தானே யாகித்
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
என்னவனா யென்னிதயம் மேவி னானே
யீசனே பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாக மாக
வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.8
446
எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே
ஏழுலக மெல்லாமுன் னாய்நின் றானே
அறிந்தார்தாம் ஓரிருவ ரறியா வண்ணம்
ஆதியும் அந்தமு மாகி யங்கே
பிறிந்தானே பிறரொருவ ரறியா வண்ணம்
பெம்மானென் றெப்போதும் ஏத்து நெஞ்சிற்
செறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.9
447
மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை
வானவரும் அறியாத வண்ணச் சூலக்
கையவனே கடியிலங்கைக் கோனை யன்று
கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற
மெய்யவனே யடியார்கள் வேண்டிற் றீயும்
விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ்
செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர்.
தேவியார் - ஒப்பிலாம்பிகை.
திருச்சிற்றம்பலம்
