திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

330

பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப்

பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்
கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்

காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
இருங்கனக மதிலாரூர் மூலத் தானத்

தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும்
அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.1

331

கற்பகமும் இருசுடரு மாயி னானைக்

காளத்தி கயிலாய மலையு ளானை
விற்பயிலும் மதனழிய விழித்தான் றன்னை

விசயனுக்கு வேடுவனாய் நின்றான் றன்னைப்
பொற்பமரும் பொழிலாரூர் மூலத் தானம்

பொருந்தியவெம் பெருமானைப் பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியி லப்பன் றன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.2

332

பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப்

பாசூரும் பரங்குன்றும் மேயான் றன்னை
வேதியனைத் தன்னடியார்க் கெளியான் றன்னை

மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போதியலும் பொழிலாரூர் மூலத் தானம்

புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்
ஆதியனை அரநெறியி லப்பன் றன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.3

333

நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை

நாகேச் சரமிடமா நண்ணி னானைச்
சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்

தத்துவனைச் சக்கரமாற் கீந்தான் றன்னை
இந்துநுழை பொழிலாரூர் மூலத் தானம்

இடங்கொண்ட பெருமானை இமையோர் போற்றும்
அந்தணனை அரநெறியி லப்பன் றன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.4

334

சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச்

சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை
விடக்கிடுகா டிடமாக உடையான் றன்னை

மிக்கரண மெரியூட்ட வல்லான் றன்னை
மடற்குலவு பொழிலாரூர் மூலத் தானம்

மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியி லப்பன் றன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.5

335

தாயவனை எவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத்

தகுதில்லை நடம்பயிலுந் தலைவன் றன்னை
மாயவனும் மலரவனும் வானோ ரேத்த

மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் றன்னை
மேயவனைப் பொழிலாரூர் மூலத் தானம்

விரும்பியஎம் பெருமானை யெல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியி லப்பன் றன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.6

336

பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப்

புகலூரும் புறம்பயமும் மேயான் றன்னை
மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை

மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை
இருளியல்நற் பொழிலாரூர் மூலத் தானத்

தினிதமரும் பெருமானை இமையோ ரேத்த
அருளியனை அரநெறியி லப்பன் றன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.7

337

காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக்

காரோணங் கழிப்பாலை மேயான் றன்னைப்
பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் றன்னைப்

பணியுகந்த அடியார்கட் கினியான் றன்னைச்
சேலுகளும் வயலாரூர் மூலத் தானஞ்

சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற
ஆலவனை அரநெறியி லப்பன் றன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.8

338

ஒப்பொருவ ரில்லாத ஒருவன் றன்னை

ஓத்தூரும் உறையூரும் மேவி னானை
வைப்பவனை மாணிக்கச் சோதி யானை

மாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானை
*மெய்ப்பொருளாய் அடியேன துள்ளே நின்ற

வினையிலியைத் திருமூலத் தானம் மேய
அப்பொன்னை அரநெறியி லப்பன் றன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
* இச்செய்யுளின் பின்னிரு அடிகள் பிற பதிப்புகளில்
காணப்படவில்லை.

6.33.9

339

பகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னைப்

பராய்த்துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை
இகலவனை இராவணனை இடர்செய் தானை

ஏத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்
புகழ்நிலவு பொழிலாரூர் மூலத் தானம்

பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை
அகலவனை அரநெறியி லப்பன் றன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.10

திருச்சிற்றம்பலம்