திருவாரூர் - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

252

உயிரா வணமிருந் துற்று நோக்கி

உள்ளக் கிழியி னுரு வெழுதி
உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்

உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி

அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட
அயிரா வணமேயென் னம்மா னேநின்

அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.

6.25.1

253

எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்

இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுது படநினையேல் பாவி நெஞ்சே

பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி

முடியா லுறவணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய

இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.

6.25.2

254

தேரூரார் மாவூரார் திங்க ளூரார்

திகழ்புன் சடைமுடிமேற் றிங்கள் சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயற்

கண்ணார்ந்த மாடங் கலந்து தோன்றும்
ஓரூரா உலகெலா மொப்பக் கூடி

உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்

அமரர்கள்தம் பெருமானே எங்குற் றாயே.

6.25.3

255

கோவணமோ தோலோ உடை யாவது

கொல்லேறோ வேழமோ ஊர்வ துதான்
பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்

பொருந்தாதார் வாழ்க்கை திருந்தா மையோ
தீவணத்த செஞ்சடைமேற் றிங்கள் சூடித்

திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்

அறியேன்மற் றூராமா றாரூர் தானே.

6.25.4

256

ஏந்து மழுவாளர் இன்னம் பரார்

எரிபவள வண்ணர் குடமூக் கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாக மாக

வார்சடையார் வந்து வலஞ்சு ழியார்
போந்தா ரடிகள் புறம்ப யத்தே

புகலூர்க்கே போயினார் போரே றேறி
ஆய்ந்தே யிருப்பார்போய் ஆரூர் புக்கார்

அண்ணலார் செய்கின்ற கண்மா யமே.

6.25.5

257

கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை

கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்

வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்

மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணந்
திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்

செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.

6.25.6

258

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்

மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே.

6.25.7

259

ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா

அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்
பாடுவார் தும்புருவும் நார தாதி

பரவுவார் அமரர்களு மமரர் கோனுந்
தேடுவார் திருமாலும் நான்மு கனுந்

தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளுங்
கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்

குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.

6.25.8

260

நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்

நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
ஓரூரு மொழியாமே ஒற்றித் தெங்கும்

உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று

திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா
தாரூரா ஆரூரா என்கின் றார்கள்

அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே.

6.25.9

261

நல்லூரே நன்றாக நட்ட மிட்டு

நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே

பலர்காணத் தலையாலங் காட்டி னூடே
இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி

இராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு
எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண

இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.

6.25.10

262

கருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக்

கருவரைபோற் களியானை கதறக் கையால்
உரித்தெடுத்துச் சிவந்ததன்றோல் பொருந்த மூடி

உமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனித்
திருத்துருத்தி திருப்பழனந் திருநெய்த்தானம்

திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள்
அரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி

அப்பனார் இப்பருவ மாரூ ராரே.

6.25.11

திருச்சிற்றம்பலம்