மறக்கிற்பனே என்னும் - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

915

காச னைக்கன லைக்கதிர் மாமணித்
தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள்
மாசி னைக்கழித் தாட்கொள வல்லவெம்
ஈச னையினி நான்மறக் கிற்பனே.

5.93.1

916

புந்திக் குவிளக் காய புராணனைச்
சந்திக் கண்ணட மாடுஞ் சதுரனை
அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை
வந்தெ னுள்ளங்கொண் டானை மறப்பனே.

5.93.2

917

ஈசன் ஈசனென் றென்றும் அரற்றுவன்
ஈசன் றானென் மனத்திற் பிரிவிலன்
ஈசன் றன்னையு மென்மனத் துக்கொண்டு
ஈசன் றன்னையும் யான்மறக் கிற்பனே.

5.93.3

918

ஈசன் என்னை யறிந்த தறிந்தனன்
ஈசன் சேவடி யேற்றப் பெறுதலால்
ஈசன் சேவடி யேத்தப் பெற்றேனினி
ஈசன் றன்னையும் யான்மறக் கிற்பனே.

5.93.4

919

தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை
வான வெண்மதி சூடிய மைந்தனை
வேனி லானை மெலிவுசெய் தீயழல்
ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே.

5.93.5

920

கன்ன லைக்கரும் பூறிய தேறலை
மின்ன னைமின் னனைய வுருவனைப்
பொன்ன னைமணிக் குன்று பிறங்கிய
என்ன னையினி யான்மறக் கிற்பனே.

5.93.6

921

கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர்ச்
சுரும்பி னைச்சுடர்ச் சோதியுட் சோதியை
அரும்பி னிற்பெரும் போதுகொண் டாய்மலர்
விரும்பும் ஈசனை நான்மறக் கிற்பனே.

5.93.7

922

துஞ்சும் போதுஞ் சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை
நஞ்சு கண்டத் தடக்கிய நம்பனை
வஞ்ச னேனினி யான்மறக் கிற்பனே.

5.93.8

923

புதிய பூவினைப் புண்ணிய நாதனை
நிதியை நீதியை நித்திலக் குன்றினைக்
கதியைக் கண்டங் கறுத்த கடவுளை
மதியை மைந்தனை நான்மறக் கிற்பனே.

5.93.9

924

கருகு கார்முகில் போல்வதோர் கண்டனை
உருவ நோக்கியை ஊழி முதல்வனைப்
பருகு பாலனைப் பான்மதி சூடியை
மருவு மைந்தனை நான்மறக் கிற்பனே.

5.93.10

திருச்சிற்றம்பலம்